சென்னை கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை அமைத்து விற்பனை: வெளியூர்களில் இருந்து கரும்பு, மஞ்சள் வரத்து அதிகரிப்பு

சென்னை: பொங்கலுக்கு ஒருநாள் மட்டுமே இருப்பதால் சென்னை கோயம்பேட்டில் ஒரே இடத்தில் மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வமுடன் குவிந்தனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தைக்கு கரும்பு, மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவை மாநிலத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் அதிகளவில் வந்துள்ளன.

இதனால் பொங்கல் சிறப்பு சந்தையில் கரும்பு விலை குறைந்துள்ளது. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு நேற்று ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.300 லிருந்து ரூ.500 வரை விற்பனையாகிறது. அந்த வகையில் கரும்பு கட்டுக்கு ரூ.200 வரை விலை குறைந்ததால் சிறு வியாபாரிகள், மக்கள் ஆர்வமுடன் கரும்புகளை வாங்கிச் சென்றனர். மஞ்சள் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கொத்து ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கரும்பு, மஞ்சள் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக கோயம்பேடு சிறப்பு சந்தையில் விலை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். சேலம், மதுரை, தஞ்சாவூர், கடலூர், புதுச்சேரியில் இருந்து கரும்பும், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மஞ்சளும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் கோயம்பேடு சிறப்பு சந்தைக்கு கொண்டு வந்துள்ளன. இதேபோல் காய்கறி விலையும் குறைந்துள்ளதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

 

The post சென்னை கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை அமைத்து விற்பனை: வெளியூர்களில் இருந்து கரும்பு, மஞ்சள் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: