தஞ்சாவூர் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள்: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்; கடந்த ஆண்டை விட விலை உயர்வு என கருத்து

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பொங்கல் பண்டிகையையொட்டி தங்களின் உறவினர்களுக்கு சீர் கொடுப்பதற்காக பொதுமக்கள் கரும்பு, வாழைத்தார், தேங்காய், மஞ்சள், இஞ்சி கொத்து, காய்கறிகள், மளிகை பொருட்கள் உட்பட பொருட்கள் வாங்க குவிந்தனர். இதனால் தஞ்சை காமராஜ் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். தமிழர்களின் பாரம்பரியமிக்க பண்டிகைகளில் ஒன்று பொங்கல் விழா. தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த பண்டிகை விவசாயிகள் இயற்கைக்கு நன்றி கூறும் விழாவாகும். 4 நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் போகிப்பண்டிகை, மறுநாள் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல், 4ம் நாள் காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்புடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் போது தேவையான பொருட்களை பொதுமக்கள் மூன்று நாட்களுக்கு முன்பே வாங்க தொடங்குவர். முக்கியமாக பெற்றோர்கள் தங்களின் மகள்கள், அண்ணன்கள் சகோதரிகளுக்கும் சீர் வரிசை கொடுக்க முன்னதாகவே பொருட்கள் வாங்கி விடுவர். அதில் கோலமாவு, மண் பானைகள், கரும்பு, மஞ்சள் கொத்துகள், வெல்லம், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்குவது வழக்கம்.

பெரும்பாலும் நகரங்களை விட கிராமங்களில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வீடுகளை சுத்தப்படுத்தி, வெள்ளையடித்து பொங்கல் விழாவை மக்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் நேற்று பொதுமக்கள் சீர்வரிசை பொருட்கள் வாங்க தஞ்சாவூர் மார்க்கெட் பகுதியில் குவிந்தனர். தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள காமராஜ் மார்க்கெட்டில் மஞ்சள், இஞ்சிக்கொத்து, கரும்பு கட்டுகள், வாழைத்தார், வாழைப்பழ சீப்பு, காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்க குவிந்தனர். மஞ்சள், இஞ்சிக்கொத்து ரகத்திற்கு தகுந்தவாறு ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையானது.

மேலும், கரும்பு கட்டு ஒன்று ரூ.400க்கு விற்பனையானது. காய்கறிகளில் மொச்சை ரூ.60 முதல் ரூ.80 வரையும், கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி ரூ.40 முதல் ரூ.45 வரையும், பரங்கிக்காய், பூசணிக்காய் சிறிய துண்டுகள் ரூ.10 என விற்பனையானது. இதேபோல் கீழவாசல் பகுதியில் பொங்கலுக்கு தேவையான மளிகைப்பொருட்களை வியாபாரிகள் தரைக்கடை அமைத்தும் விற்பனை செய்தனர். இதனால் கீழவாசல் பகுதியிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொதுமக்களின் வரத்து சுமாராகத்தான் இருக்கிறது. சீர் வரிசை வைக்க பொருட்கள் வாங்குபவர்கள் கூட்டம் தான் அதிகம் உள்ளது. நாளை முதல் வியாபாரம் களை கட்டும் என்று எதிர்பார்க்கிறோம். பானைகள், கரும்புகளின் விலை சற்று உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் குறைந்த அளவிலே வாங்குகின்றனர். கோலமாவு, மஞ்சள் கொத்து ஆகிய பொருட்களும் விலை உயர்ந்துள்ளது. பொங்கலுக்குள் இதன் விலை வரத்துக்கு தகுந்தார்போல் குறைய வாய்ப்புள்ளது. வாழைத்தார் விற்பனை குறைந்து தான் இருக்கிறது.

மக்கள் வாழைத்தாராக வாங்காமல் சீப் கணக்கில் வாங்குகின்றனர். கடந்த ஆண்டு ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையான பூவன் வாழைத்தார் இந்த ஆண்டு ரூ.450 வரை விலை உயர்ந்துள்ளது. இதுவும் மக்கள் வாங்குவது குறைய முக்கிய காரணம். ஒரு சீப், 2 சீப் என்ற கணக்கில் மக்கள் வாழைப்பழங்களை வாங்கி செல்கின்றனர். இது எங்களுக்கு கட்டுப்படியாகாத நிலை தான் இருப்பினும் மற்ற பொருட்கள் போல் வாழைப்பழங்களை இருப்பு வைத்து விற்க முடியாது. தற்போது வந்துள்ள வாழைத்தார்கள் விற்பனை ஆனாலே போதும் என்ற நிலை தான் உள்ளது. இருந்தாலும் இன்னும் 2 நாட்கள் இருப்பதால் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தனர்.

The post தஞ்சாவூர் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள்: பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்; கடந்த ஆண்டை விட விலை உயர்வு என கருத்து appeared first on Dinakaran.

Related Stories: