பொங்கல் பண்டிகையானது வேளாண்மையை அடிப்படையாக கொண்ட நாளாகும். பொங்கல் அன்று விவசாயிகள் தாங்கள் நிலத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரிசியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும். ஒரு சிலர் பொங்கல் அன்று புதிய பானையிலோ அல்லது வழக்கம் மாறாமல் எப்போதும் வைக்கும் பொங்கல் பானையில் மஞ்சள் குங்குமம் இட்டு, பொங்கல் பானையின் கழுத்து பகுதியில் விளைந்த மஞ்சள் கொத்தினை கட்டி நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைப்பார்கள்.
பால் பானையிலிருந்து பொங்கி வழியும் நேரத்தில் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் ஒன்றாக சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் உரைப்பார்கள். பொங்கல் தயார் செய்த பிறகு அவர்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு படைத்துவிட்டு தீபம் காட்டிய பிறகு அனைவருக்கும் கொடுத்துவிட்டு உண்பார்கள். பொங்கல் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் இருந்து வந்தது, பொங்கல் என்றால் “பொங்குதல்” அல்லது “கொதிப்பது” என்று பொருள். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு அறுவடைத் திருநாள். சூரியன், இயற்கை அன்னை மற்றும் விளைச்சலுக்கு பங்களிக்கும் பல்வேறு பண்ணை விலங்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு கொண்டாட்டம் இது.
4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல், மங்களகரமான மாதமாக கருதப்படும் தை எனப்படும் தமிழ் மாதத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 அல்லது 15ம் தேதிகளில் வரும். இந்த பண்டிகையின்போது செய்து உண்ணும் உணவிற்கும் பொங்கல் என்று பெயர். இது வேகவைத்த இனிப்பு அரிசி கலவையாகும். இது குளிர்கால சங்கிராந்தி அன்று கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய இந்து கணக்கீட்டு முறையின்படி, சூரியன் அதன் தென்கோடியை அடைந்து, மீண்டும் வடக்கு நோக்கி திரும்பி, மகர ராசியில் நுழையும் அந்த தினம் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
The post வேளாண்மையை அடிப்படையாக கொண்ட திருநாள் appeared first on Dinakaran.