அயலக தமிழர் தினவிழா கண்காட்சி தொடக்கம் வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது அயலக தமிழர் நலத்துறை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த அயலக தமிழர் தின விழா கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் அயலகத் தமிழர் தினம் மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஜெர்மன் தமிழ் சங்கங்கள், தமிழ் மரபு அறக்கட்டளை, ஐக்கிய வர்ச்சி நாடுகள், வட அமெரிக்க தமிழ் வளர்ச்சி சங்கங்கள் சார்பாகவும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், தமிழ் வளர்ச்சித் துறை, தொல்லியல்துறை, உயர் கல்வித்துறை, புலம் பெயர்ந்தோர் பாதுகாவலர், தமிழ் இணைய கல்விக் கழகம், அயல்நாட்டு வேலைவாய்பபு நிறுவனம் சார்பாகவும் அரங்குகள் இடம்பெற்றன.

விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து 50 நூல்களை வெளியிட்டு பேசியதாவது: கலைஞரின் ‘தமிழ் வெல்லும்’ எனும் கருப்பொருளின் அடிப்படையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 58 நாடுகளில் இருந்து பல்வேறு தரப்பட்ட கவிஞர்கள், எழுதாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். வெளிநாட்டு வேலை எனும் பெயரில் ஏஜென்ட்கள் செய்யும் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 135 நாடுகளில் தமிழர் வாழ்கிறார்கள். தமிழர் இல்லாத நாடே இல்லை. பல்வேறு நாடுகளில் படிப்பு, பணிக்காக தமிழர்கள் சென்றுள்ளனர். அவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பை அயலக தமிழர் நலத்துறை ஏற்படுத்தி தரும்.

அயலக தொழில் முனைவோர்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு பாட நூல் கழகம் மூலம் வெளிநாட்டு வாழ் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க நூல்கள் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இறந்தவர்களுடைய உடலை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு மாவட்ட ஆட்சியர் முதல் ஒன்றிய உள்துறை அமைச்சர் வரை போராட வேண்டிய நிலை இருந்தது. அப்படி இருந்தாலும் பல மாதங்களுக்கு பிறகுதான் உடல் கிடைக்கும். தற்போது 10 நாட்களுக்குள் உடல் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது அரசின் சாதனை. இவ்வாறு பேசினார். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், கவிஞர்கள் பங்கேற்றனர். இன்று 2வது நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘எனது கிராமம்’ என்ற திட்டத்தை தொடங்கி, 8 பிரிவுகளில் சிறந்து விளங்கும் அயலக தமிழர்களுக்கு விருதுகளை வழங்குகிறார்.

The post அயலக தமிழர் தினவிழா கண்காட்சி தொடக்கம் வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது அயலக தமிழர் நலத்துறை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: