கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலம்; 50 ஆயிரம் பக்தர்கள் நேர்த்திக்கடன்: நாளை தேரோட்டம்

கோபி: கோபி அருகே உள்ள பாரியூரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். நாளை தேரோட்டம் நடக்கிறது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா இன்று நடந்தது. முன்னதாக கடந்த டிசம்பர் 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த 5ம் தேதி தேர் நிலை பெறுதல் நிகழ்ச்சியும், 8ம் தேதி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது.

நேற்று காலை மாவிளக்கு காப்பு கட்டுதலும், அதைத்தொடர்ந்து இரவு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 10 டன் விறகுகளை கொண்டு குண்டம் தயாரிக்கும் பணி தொடங்கியது. விடிய விடிய 10 டன் விறகுகளையும் எரித்து 60 அடி நீளத்திற்கு குண்டம் தயாரிக்கும் பணியில் வீரமக்கள் ஈடுபட்டனர். பின்னர், அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது, நந்தா தீபம் ஏற்றப்பட்ட பிறகு கோயில் தலைமை பூசாரி ராமானந்தம் குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்து குண்டம் இறங்கினார். தொடர்ந்து கோயில் பூசாரிகள் மற்றும் வீரமக்கள் குண்டம் இறங்கினர்.

அதைத்தொடர்ந்து 15 நாட்களாக காப்பு கட்டி விரதமிருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்,போலீசார், தீயணைப்புத் துறையினர், பொதுசுகாதாரத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் குண்டம் இறங்கினர்.அப்போது, சிம்ம வாகனத்தில் அம்மன் காட்சியளித்தார். இதையொட்டி ஈரோடு எஸ்பி ஜவஹர் தலைமையில் கோபி டி.எஸ்.பி தங்கவேல், சத்தியமங்கலம் டி.எஸ்.பி.சரவணன், பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி தலைமையில் ஏராளமான போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குண்டம் இறங்கும் முன் பக்தர்கள் போலீசாரின் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். அதேபோன்று கோயில் வளாகம் மற்றும் வெளிப்புற பகுதிகள் முழுவதும் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. நாளை 12ம் தேதி தேரோட்டமும், 13ம் தேதி தேர்நிலை பெறுதலை தொடர்ந்து சாமி மலர் பல்லக்கில் எழுந்தருளதல் நிகழ்ச்சியும், 14ம் தேதி கோபியில் தெப்போற்சவமும், 16 மற்றும் 17ம் தேதி மஞ்சள் நீர் உற்சவமும் 17 மற்றும் 18ம் தேதி புதுப்பாளையத்திலும், 19 மற்றும் 20ம் தேதி நஞ்சகவுண்டன்பாளையத்தில் மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெற உள்ளது.அதைத்தொடர்ந்து 20ம் தேதி மாலை சாமி கோயில் வந்தடைந்து மறு பூஜையுடன் திருவிழா நிறைவு பெறும்.

The post கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலம்; 50 ஆயிரம் பக்தர்கள் நேர்த்திக்கடன்: நாளை தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: