காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகையுடன் பொங்கல் தொகுப்பு: அமைச்சர் அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம், ஜன. 11: காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகையுடன் பொங்கல் தொகுப்பினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம், படப்பை பேருந்து நிலையத்தில், நேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000த்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகளையும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் பெரும்புதூர் தொகுதி எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் வழங்கினர்.

பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழர் திருநாளாம் தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ₹1000த்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு’ ஆகியவை கொண்ட ‘பொங்கல் பரிசு தொகுப்பு’ வழங்கிட ஆணையிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ₹1000த்தை குன்றத்தூர் ஒன்றியம், மணிமங்கலம் படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மணிமங்கலம் நியாய விலைக்கடையின் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும் 634 நியாயவிலைக்கடைகளுடன் இணைந்த பொங்கல் பரிசு பெற தகுதி வாய்ந்த 3,96,752 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ₹1000 வழங்குவதற்கு தமிழக அரசால் ₹43.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியுள்ள மொத்த 3,96,752 குடும்ப அட்டைகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி வீதம் 397 மெட்ரிக் டன் ₹1.40 கோடி மதிப்பிலும், ஒரு கிலோ சர்க்கரை வீதம் 397 மெட்ரிக் டன் ₹1.60 கோடி மதிப்பிலும், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு முழு கரும்பு வீதம் 3,96,752 முழு கரும்புகள் ₹1.31 கோடி மதிப்பிலும், ₹1000 வீதம் 3,96,752 குடும்ப அட்டைகளுக்கு ₹39.68 கோடி மதிப்பிலும், மொத்தம் ₹43.99 கோடி செலவில் வழங்கப்படவுள்ளன.

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை எவ்வித சிரமமுமின்றி பெற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் கலைச்செல்வி மோகன், பெரும்புதூர் எம்எல்ஏ செல்வபெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர், மேலாண்மை இயக்குநர் முருகன், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ஜெய, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி, படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.

The post காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகையுடன் பொங்கல் தொகுப்பு: அமைச்சர் அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: