நெல்லை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுமார் 1673 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 7 பணிமனைகளிலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 பணிமனைகள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 பணிமனைகள், குமரி மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளில் இருந்து நேற்று காலை நிலவரப்படி 1107 பஸ்கள் இயக்கப்பட வேண்டும். இதில் 98 சதவீதத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் காலையில் முறைப்படி இயக்கப்பட்டன. கிராமங்களுக்கு செல்லும் ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்படவில்லை. நெல்லை மாவட்டத்தில் வழக்கமாக இயக்கப்படும் 556 பஸ்களுக்கு பதிலாக ஸ்பேர் பஸ்கள் உள்பட 574 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 டெப்போக்களில் உள்ள 618 பேருந்துகளில் 594 பஸ்கள் நேற்று வழக்கமாக இயக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 6 டெப்போக்களில் 320 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 250 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 டெப்போக்களில் உள்ள 300 பஸ்களில் நேற்று மட்டும் 275 பஸ்கள் இயக்கப்பட்டன. தேனி மாவட்டத்திலுள்ள 7 டெப்போக்களில் 355 பஸ்கள் வழக்கமாக இயக்கப்படுகின்றன. இதில், 338 பஸ்கள் நேற்று இயங்கின. திண்டுக்கல் மாவட்டத்தில் 8 டெப்போக்களில் உள்ள 384 பஸ்களில் 365 நேற்று வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 கிளைகளில் 418 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், நேற்று 395 பஸ்கள் இயங்கின.
* அண்டை மாநில சேவை பாதிப்பில்லை
பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கால் அண்டை மாநில சேவை பாதிக்கப்படவில்லை. சத்தியமங்கலத்தில் இருந்து அண்டை மாநிலமான கர்நாடக மாநிலம் மைசூர், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன. திருப்பதி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கம்போல் தமிழக பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் திருப்பதி திருமலைக்கு வந்த தமிழக பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படவில்லை. சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டதால் அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கு செல்ல பஸ்களின் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை. இதேபோல், புதுச்சேரிக்கும் தமிழக பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.
* ‘அதிமுக ஆட்சியில் போராட்டம் நடந்த அப்போ ஓட்ட சொன்னீங்க…இப்போ ஏன் தடுக்குறீங்க…’ கேள்வி கேட்ட டிரைவரை தாக்க முயற்சி
சேலம் பழைய பஸ் நிலையத்தில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சென்னகிருஷ்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பஸ்களை இயக்கவிடாமல் டிரைவர்களை தடுத்தனர். இதில் ராசிபுரம் பணிமனையை சேர்ந்த 52ம் நம்பர் பஸ்சின் டிரைவர் மற்றும் பெண் நடத்துனரிடம் ‘உங்களுக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். நீங்கள் பஸ்சை ஓட்டக்கூடாது’ என்று கூறி அவர்களை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடிக்க பாய்ந்தனர். அப்போது அந்த டிரைவர், ‘உங்கள் அதிமுக ஆட்சி காலத்திலும் இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடந்தது. அப்போது அவர்கள் சொன்னதற்கு இணங்க பஸ்களை ஓட்டினோம். இப்போதும் ஓட்டுகிறோம். எனவே எங்களை தடுப்பதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது’ என்றார். இதனால் அப்செட்டான சென்னகிருஷ்ணன், அந்த டிரைவரிடம் பஸ்சை ஓட்டச்சொல்லி கை அசைத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
* பஸ்களை இயக்கிய டிரைவர்களை மிரட்டிய அதிமுக தொழிற்சங்கத்தினர்
கடலூர் பணிமனையில் இருந்து பேருந்துகள் வழக்கம்போல் நேற்று இயக்கப்பட்டன. அப்போது அதிமுகவை சார்ந்த தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை இயக்கக் கூடாது என்று டிரைவர்களை மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் அருகே பணிமனையில் நேற்று அதிகாலை முதலே போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவை சார்ந்த தொழிற்சங்கத்தினர், வழக்கம்போல் இயக்கப்பட்ட பஸ்களை வெளியே செல்ல விடாமல் பணிமனை முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரிக்கையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
The post தமிழ்நாடு முழுவதும் வழக்கம்போல் இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் அனைத்து மாவட்டங்களிலும் சிரமமின்றி மக்கள் பயணம்: சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர், நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் 100 % இயக்கம் appeared first on Dinakaran.