ஏப்ரல் மாதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி மாற்றம் அமல்படுத்த கோரிக்கை

மதுரை, ஜன. 9: ஜிஎஸ்டி வரி மாற்றம் என்பதை, ஏப்ரல் மாதத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 32ம் ஆண்டு விழா பொதுக்குழு கூட்டம் மதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. தலைவர் மாதவன், செயலாளர் வினோத் கண்ணா ஆகியோர் தலைமை வகித்தனர். ஒரே நாடு, ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது.

தற்போதைய நடைமுறையில் நுகர் பொருட்களுக்கு 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் என பல்வேறு அடிப்படையில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. வரி வருவாய் உயரும்போது அனைத்து விதமான வரியும் குறைக்கப்படும் என்று ஒன்றிய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இன்று வரை வரி வருவாய் அதிகரித்து வருவது தெளிவாக தெரிகிறது. ஆனால் எவ்வித வரி குறைப்பும் இதுவரை ஒன்றிய அரசால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.வரும் நிதியாண்டில் எந்த ஒரு பொருளுக்கும் ஜிஎஸ்டி வரி என்பது 5 முதல் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது.

புதிய வரி விதிப்பு, ஜிஎஸ்டி குறைப்பு, உயர்வு அல்லது வரி விலக்கு அறிவிப்பை அமல்படுத்துவது நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் மாதத்தில் மட்டுமே இருக்கவேண்டும். ஆண்டுக்கு இடையில் வரி மாறுதல்கள் செய்யக்கூடாது என மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் வெங்கடேஷ், கௌரவ ஆலோசகர் ஜெயபிரகாசம், மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், எண்ணெய் விற்பனையாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, தேர்தல் குழு தலைவர் வேல்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post ஏப்ரல் மாதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி மாற்றம் அமல்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: