மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை கருவறையில் இருந்த நகைகள் தப்பின

விழுப்புரம், ஜன. 9: விழுப்புரத்தில் மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரி ரவி என்பவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோயிலில் பூஜை செய்து விட்டு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்த போது கோயிலின் முன்பக்கம் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கருவறைக்கு செல்லும் கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் கருவறையில் உள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்த கொள்ளையர்கள் நகைகள் ஏதும் இருக்கிறதா என்று தேடிப்பார்த்துள்ளனர். எதுவும் கிடைக்காத நிலையில் கேமராவின் ஹார்டு டிஸ்க்கையும் எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் மதில் சுவர் ஏறி உள்ளே வந்துள்ள மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது. நல்ல வேலையாக கருவறையில் அம்மன் காலடியில் இருந்த 2 பவுன் நகையை, கொள்ளையர்கள் பார்க்காததால் அது தப்பியது. இதனிடையே உண்டியலில் கடந்த ஆடி மாத திருவிழா முடிந்துதான் காணிக்கை எண்ணப்பட்டதாகவும், தற்போது ரூ.20,000 வரை இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை கருவறையில் இருந்த நகைகள் தப்பின appeared first on Dinakaran.

Related Stories: