மக்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கும் இடங்களை தனியாருக்கு தாரைவார்க்காமல் அரசு பாதுகாக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் இடங்களை தனியாருக்கு கொடுத்துவிடாமல் அரசு பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சுகுமாரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் உள்ள மாடம் என்ற கிராமத்தில் அரசு புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்ட கிராம நத்தம் நிலம் அந்த பகுதி மக்களின் விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் 3 சென்ட் நிலத்தில் ரத்தினவேல் என்பவர் வீடு கட்டியுள்ளார். இதற்கான அனுமதியை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிமுறைகளுக்கு முரணாக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அளித்த உத்தரவு வருமாறு: விளையாட்டு மைதானத்தில் வீடு கட்டுவதற்கு சட்டவிரோதமாக சிலருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சிறப்பு தாசில்தார் அறிக்ைக தாக்கல் செய்துள்ளார். அதில், வீடற்ற ஆதிதிராவிடர் மக்களுக்கு வீடு வழங்க மாடம் கிராமத்தில் இடம் ஒதுக்குவதற்காக 1964ல் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் ரத்தினவேலுக்கு வீடு கட்ட பட்டா வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் மனுவில் கூறப்பட்டுள்ள இடம் விளையாட்டு மைதானத்திற்கான கிராம நத்தம் என்று கூறப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்க முடியாது. இதை எதிர்த்து மனுதாரர் கடந்த 2015ல் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கவில்லை. குறைந்தபட்சம் கட்டுமானத்தையாவது அதிகாரிகள் நிறுத்தியிருக்கலாம். ஆனால், அரசு நிலத்தை சட்ட விரோதமாக வீடுகட்ட ஒதுக்கீடு செய்துள்ளனர். அதன்படி விளையாட்டு மைதானத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது. பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் இடம் கண்டிப்பாக தனியாருக்கு வழங்கப்படக்கூடாது. பொது இடத்தை தனியாருக்கு ஒதுக்குவது லஞ்சத்தை அனுமதிப்பது போலாகிவிடும். பொது பயன்பாட்டுக்கான இடங்களை தனியாருக்கு விட்டுக்கொடுத்துவிடாமல் அரசு கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும்.  எனவே, கிராம மக்களுக்கான விளையாட்டு மைதானத்தில் இடத்தை ஒதுக்கிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த வீட்டை ஒரு மாதத்திற்குள் இடிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர் ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது….

The post மக்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கும் இடங்களை தனியாருக்கு தாரைவார்க்காமல் அரசு பாதுகாக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: