சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் நேற்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வந்த கமல்ஹாசன், பல்வேறு பிரச்னைகளால் அப்படத்தில் தொடர்ந்து நடிக்கவில்லை. இதனால், காலவரையறையின்றி அப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, தெலுங்கில் ராம் சரண், கியாரா அத்வானி நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். கமல்ஹாசனும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் வெளிநாடு சென்றிருந்தார். அங்கு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தொடர்ந்து அங்கிருந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்துப் பேசி ஆலோசனைகள் வழங்கினார். பிறகு அவர் சென்னை திரும்பினார். நேற்று மாலை சென்னையில் நடக்கவிருந்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற படத்தின் ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க சம்மதித்திருந்தார். ஆனால், திடீரென்று கனத்த மழையின் காரணமாக அவ்விழா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று மதியம் 2.57 மணியளவில் கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பிறகு லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில், கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் கமல்ஹாசன் விரைவில் குணமடைய வேண்டும் என்று, சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர்.* கமல்ஹாசன் விரைவில் குணமடைய முதல்வர் டிவிட்மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன், கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோரும் கமல் நலம் பெற வேண்டும் என கூறியுள்ளனர்….
The post கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு appeared first on Dinakaran.