போகிப்பண்டிகைக்கு பயன்பாட்டில் இல்லாத பொருட்களை எரிக்க வேண்டாம்: தாம்பரம் மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: போகிப்பண்டிகைக்கு பயன்பாட்டில் இல்லாத பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தாம்பரம் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பழைய துணி, டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என தாம்பரம் மாநகராட்சி கூறியுள்ளது. தேவையில்லாத பொருட்களை எரிப்பதை தவிர்த்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம். நாளை 09.01.2024 முதல் வரும் 14ம் தேதி வரை தேவையற்ற பொருட்களை வழங்கலாம் என்று தாம்பரம் மாநகராட்சி கூறியுள்ளது.

பொங்கல் பண்டிகையின் முந்தைய நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படும். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் ஆண்டு தோறும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. போகம் என்ற சொல்லிற்கு அதிபதியாக விளங்குபவர் இந்திர பகவான். விவசாய மக்களுக்கு விவசாயம் செய்யும் நேரத்தில் மழையை பொழிகின்ற இந்திர பகவானை சிறப்பிக்கும் விதமாக போகி பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப் பட்ட பழைய பொருட்களை போகிப் பண்டிகையின் போது தீயிட்டு கொளுத்தி வந்தனர். ஆனால் இன்றைய சூழலில் போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருட்கள் , ரப்பர் பொருட்கள் போன்றவற்றை எரிப்பதினால் நச்சு மிகுந்த ரசாயன வாயு அதிலிருந்து வெளியேறுகிறது.

இதனால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு தாமதம் ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் போகியன்று ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு இந்த நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதனைத் தவிர்ப்பதற்காக பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் ட்யூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிக்கக் கூடாது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆண்டுதோறும் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சி இந்த ஆண்டு புது முயற்சியை எடுத்துள்ளது. புகையில்லாத போகியை கொண்டாடும் வகையில் மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளில் போகி பண்டிகையின்போது பொதுமக்கள் பொருட்களை எரிப்பதால் காற்று மிகவும் மோசடைந்து மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக அதிகாலை எரிக்கப்படும் துணிகள், டயர், டியூப், பிளாஸ்டிக் போன்ற நச்சு பொருட்களால், காற்றில் நச்சு நுண் துகள்கள் அதிகளவில் படிந்து, காற்று மாசை ஏற்படுத்துகிறது. அந்த காற்றை சுவாசிக்கும் ஆஸ்துமா நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் மூச்சுத்திணறல் போன்றவற்றால் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், புகைமூட்டத்தால் விமான போக்குவரத்து முதல் சாலையோர போக்குவரத்து வரை பாதிக்கப்படுகிறது. இவற்றை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி முதன் முறையாக, புது முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேவையற்ற நிலையில் உள்ள டயர், டியூப், துணிகள், பிளாஸ்டிக் பொருட்களை, மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் வழங்கலாம். அந்த பொருட்களை பெறும் பணி நாளை முதல் துவங்குகிறது.

 

The post போகிப்பண்டிகைக்கு பயன்பாட்டில் இல்லாத பொருட்களை எரிக்க வேண்டாம்: தாம்பரம் மாநகராட்சி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: