திருநாவலூர் வட்டாரத்தில் நெல் வயல்களில் வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் வட்டாரத்துக்கு உட்பட்ட உடையாணந்தல், மணலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது நெல் பயிரானது பூப்பூக்கும் மற்றும் கதிர் வரும் நேரத்தில் உள்ளது. இந்த நேரத்தில் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகளவில் இருப்பதால் நெற்பயிரில் இலை புள்ளி மற்றும் குலை நோய் தாக்குதல் காணப்படுகிறது. இந்த பகுதிகளை திருநாவலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜ், துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி வேளாண்மை அலுவலர் புகழேந்தி ஆகியோர் வயலுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர்.

இதனை கட்டுப்படுத்த மெட்டோமினோஸ்ட்ரோபின்-200 மில்லி ஏக்கர் அல்லது அசாக்ஸிஸ்டோராபின்-200 மில்லி ஒரு ஏக்கருக்கு அல்லது டிரைசைக்லோசால்-120 கிராம் வீதம் ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும். மேலும் இலை கருகல் நோய் காணப்பட்டால் ஸ்டெர்ட்டோ மைசின் சல்பேட்டுடன் டெட்ராசைக்ளின் கலவை 300 கிராம் அதனுடன் காப்பர் ஆட்சி குளோரைடு 500 கிராம் ஒரு ஏக்கர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

மேலும் தற்போது காணப்படும் இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ப்ளூ பென்டா மைட் 20 மில்லியை ஒரு ஏக்கர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சியான புகையான் தாக்குதல் காணப்பட்டால் வயலில் தண்ணீரை வடித்து விட்டு இமிடாகுளோபிரட் 100 மில்லி அல்லது பிப்ரோனில்-250 மில்லி ஏக்கர் வீதம் தெளிப்பு செய்து கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.

The post திருநாவலூர் வட்டாரத்தில் நெல் வயல்களில் வேளாண் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: