ராம ராஜ்ஜியமும் தேர்தலும் வருவதால் 2024 சுபிட்சமானது: ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் கருத்து

அயோத்தி: ‘ராம ராஜ்ஜியமும், மக்களவை தேர்தலும் வருவதால் 2024ம் ஆண்டு அனைவருக்கும் சுபிட்சமாக இருக்கும்’ என ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை வடிவ ராமர் சிலை (ராம் லல்லா) பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இந்நிலையில், 2024 புத்தாண்டு பிறந்துள்ளதையொட்டி, ராம் லல்லாவுக்கு 56 வகை உணவுப் பொருட்களுடன் சிறப்பு ஆரத்தி, பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் அளித்த பேட்டியில், ‘‘ராம ராஜ்ஜியம் வரப் போகிறது. கோயில் கருவறையில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் துக்கம், வலி, பதற்றம் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் வரும் 22ம் தேதி ராம் லல்லா கருவறையில் வீற்றிருக்கப் போகிறார், அதோடு, மக்களவை தேர்தலும் நடக்க உள்ளது. எனவே அனைத்தும் சுபிட்சமாக நன்றாக நடக்கும்.

அயோத்தியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன. விமான நிலையம் வந்துள்ளது, புதிய ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது, ராமர் பாதை உருவாகியுள்ளது. இதுபோன்ற பல சாலைகள், திட்டங்கள் மூலம் அயோத்தி பிரமாண்டமாக காட்சியளிக்கும். மக்கள் அனைவரும் வந்து தரிசனம் செய்யுங்கள். இது மிகவும் புனிதமான மாதம். அனைவருக்கும் என் ஆசிர்வாதம்’’ என கூறி உள்ளார். ‘ராம ராஜ்ஜியம்’ என்பது மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் சிறந்த ஆட்சியைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல் என கூறப்படுகிறது.

The post ராம ராஜ்ஜியமும் தேர்தலும் வருவதால் 2024 சுபிட்சமானது: ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: