தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தகவல்

சென்னை: தென் மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது: மேற்கு மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை அடுத்துள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று (30ம் தேதி) காலை 8.30 மணி அளவில் உருவாகியுள்ளது என்றும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைந்து, தெற்கு அரபிக் கடல் மற்றும் அதனை அடுத்த மேற்கு மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் 4.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் 7 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் தாமிரபரணி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 2.91 லட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின்படி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்று குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா மற்றும் மாலத் தீவு பகுதிகளில் நாளையும், ஜன.2, 3 தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் 40-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதாலும் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீன் பிடிக்க செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மூலம் 24 மணி நேரமும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: