திருப்பதி கோயிலில் பிரணய கலக உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோபத்துடன் வரும் தாயாரை சமாதானப்படும் பிரணய கலக உற்சவம் நடந்தது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசிக்கு 6வது நாள் பிரணய கலக உற்சவம் நடத்தப்படுகிறது. பிரணய கலக உற்சவம் என்பது கோபத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை மலையப்ப சுவாமி சமாதானப்படுத்தும் உற்சவமாகும். அதன்படி நேற்று மாலை நடந்த பிரணய கலக உற்சவத்தையொட்டி, ஸ்ரீதேவி பூதேவி தாயார்கள் பல்லக்கில் எழுந்தருளி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தின் அருகே (வராக சுவாமி கோயில்) எதிரில் வந்தனர்.

மலையப்ப சுவாமி 4 மாடவீதி வழியாக வராக சுவாமி கோயிலுக்கு எதிர்திசையில் வந்தபோது தாயார்களை சமாதானப்படுத்தும் வகையில் ஜீயர்கள் மற்றும் அர்ச்சகர்கள் இருதரப்பிலும் எதிர், எதிர் திசையில் நின்றனர். பின்னர் மலையப்ப சுவாமி தரப்பில் ஜீயர்கள் திவ்ய பிரபந்தம் பாடியும், புராண இதிகாசம் படித்தும் தாயார்களை சமாதானப்படுத்தினர். ஸ்ரீதேவி, பூதேவி தாயார் தரப்பினர் 3 முறை பூப்பந்துகளை மலையப்ப சுவாமி மீது வீசியும், அதில் இருந்து தப்பிக்க மலையப்ப சுவாமி தரப்பினர் பின்னால் செல்லும் சம்பிரதாய உற்சவம் நடந்தது. தாயாரை சமாதானப்படுத்திய பிறகு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி இணைந்து கோயிலுக்கு வந்தடைந்தார்.வராக சுவாமி கோயில் எதிரே உள்ள 4 மாடவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

 

The post திருப்பதி கோயிலில் பிரணய கலக உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: