ஒன்றிய பாஜ அரசின் ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் : மார்க்சிஸ்ட் கட்சி மனு கொடுக்கும் போராட்டம்

கும்மிடிப்பூண்டி: ஒன்றிய பாஜ அரசின் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை, தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடைப்பெற்றது. ஒன்றிய பாஜ அரசு மின்சார சட்டம்- 2022ஐ கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மின் மீட்டர் 2025 டிசம்பர் 31க்குள் அனைத்து வீடுகளிலும் பொருத்த வேண்டும் என பாஜ அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.

இந்த ஸ்மார்ட் மின் மீட்டரை தமிழகத்திலும் பொருத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே அனைத்து மின் இணைப்புகளுக்கும் மின் மீட்டர் பொருத்தப்பட்டு துல்லியமாக கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்பட்டால் விவசாய பம்ப் செட்டுகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும். வீடுகளுக்கு வழங்கும் இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் ரத்தாகும். மின் வாரியம் தனியாருக்கு விற்கப்படும், காலை, மாலை நேரங்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

செல்போனில் ப்ரீபெய்ட் கார்டு போட்டு பயன்படுத்துவது போல, மின்சாரத்தை பயன்படுத்த முன்னரே பணம் செலுத்தி வாங்க வேண்டும். இது போன்ற ஆபத்தான நிலைக்கு மக்களை கொண்டு செல்லும். இந்த நிலையில், மோடி அரசு கொண்டு வந்துள்ள உள்ள ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், நேற்று கும்மிடிப்பூண்டியில் உள்ள மின் உதவி செயற்பொறியாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கவரைப்பேட்டை உதவி செயற்பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், கட்சியின் மாவட்ட செயலாளர் கோபால், வட்டச் செயலாளர் ராஜேந்திரன், வட்டக் குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், லோகநாதன், ஜோசப், குப்பன், சீனு, எல்ஐசி ஊழியர் செல்வகுமார், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டிக்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய பாஜ அரசின் ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் : மார்க்சிஸ்ட் கட்சி மனு கொடுக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: