ரஷ்ய துணை பிரதமருடன் கையெழுத்து; கூடங்குளம் அணுமின் திட்டத்தில் புது ஒப்பந்தம்: மாஸ்கோவில் வெளியுறவு அமைச்சர் தகவல்


மாஸ்கோ: கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக ரஷ்ய துணை பிரதமருடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார். நான்கு நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘இந்தியா உடனான மற்ற நாடுகளின் உறவில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு மட்டும் நிலையானதாக உள்ளது. ஒவ்வொரு நாடும் பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி ஆகிய துறைகளில் தாங்கள் நம்பும் நாடுகளுடன் மட்டுமே உறவை வைத்துக் கொள்ளும். அவ்வாறு பார்க்கும் போது, ​​இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு அசாதாரணமானது. கடந்த 60, 70, 80 ஆண்டுகளில் எந்தவொரு நாட்டிற்கும் இடையேயான உறவுகள் பார்த்தால், ஏற்ற தாழ்வுகளைக் காணமுடிகிறது.

ரஷ்யா-சீனா, ரஷ்யா-அமெரிக்கா, ரஷ்யா-ஐரோப்பா, இந்தியா-சீனா, இந்தியா-அமெரிக்கா நாடுகளை கூறமுடியும். உலகில் எத்தனையோ மாற்றங்கள், அரசியல் சூழல்கள் மாறியிருந்தாலும் இந்தியா – ரஷ்யா இடையேயான உறவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சீராக வேகத்தில் முன்னோக்கி செல்கிறது. பாதுகாப்பு மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளிலும் இந்தியாவின் முக்கிய பங்காளியாக ரஷ்யா உள்ளது. கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக ரஷ்ய துணைப் பிரதமர் டென்னிஸ் மந்துரோவுடன் இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டேன். அணுசக்தி மற்றும் விண்வெளி துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு உறுதியாகவும், நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது’ என்று கூறினார்.

The post ரஷ்ய துணை பிரதமருடன் கையெழுத்து; கூடங்குளம் அணுமின் திட்டத்தில் புது ஒப்பந்தம்: மாஸ்கோவில் வெளியுறவு அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: