விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி அவரது மகளுக்கு பாலியல் டார்ச்சர்: போக்சோவில் வக்கீல் கைது


பெரம்பூர்: விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த பெண்ணை காதல்வலையில் வீழ்த்தி அவரது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வக்கீலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 29 வயது பெண், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குருமாரிராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், தம்பதி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துசென்ற அந்த பெண் தனியாக வசித்துவந்ததுடன் விவாகரத்து கேட்டு சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நாராயணப்பா கார்டன் தெரு பகுதியை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ருத்ரமூர்த்தி (41) என்பவர் மூலம் வழக்கை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், வக்கீல் ருத்ரமூர்த்தியுடன் பழக்கம் அதிகரித்து அவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளார்.

ருத்ரமூர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இல்லாததால் அந்த பெண்ணுடன் வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்துவந்துள்ளார். அவர்களுடன் குழந்தைகளும் வசித்ததாக தெரிகிறது. கடந்த 24ம்தேதி பெண், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அந்த பெண்ணின் ஒன்பது வயது மகளுக்கு ருத்ரமூர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கேட்டபோது ருத்ரமூர்த்தி பதில் ஏதும் கூறாமல் சென்றுவிட்டார். இந்தநிலையில், நேற்று குழந்தையின் உடம்பில் குறிப்பிட்ட இடங்களில் வலி அதிகமாக இருந்ததால் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவரிடம் காண்பித்துள்ளார். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ‘’குழந்தைக்கு யாரோ பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து உள்ளார்கள்’’ என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இது குறித்து செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கண்ணகி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் வக்கீல் ருத்ரமூர்த்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்று காலை ருத்ரமூர்த்தியை கைது செய்து விசாரித்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

The post விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி அவரது மகளுக்கு பாலியல் டார்ச்சர்: போக்சோவில் வக்கீல் கைது appeared first on Dinakaran.

Related Stories: