பகை விலக்கும் கோமேதகம்

நவரத்தினங்களில் ராகுவிற்கு உரிய ரத்தினம் கோமேதகம் ஆகும். இதன் நிறம் மஞ்சளும் (பிரவுனும்) கலந்த நிறமாக இருப்பதினால் கோமிய நிறத்தில் இருக்கும். எனவே இதை முற்காலத்தில் கோமியம் என்று அழைத்தனர்.

ஆங்கில கார்னெட் (Garnet) என்பர். கோமேதகத்தில் வெள்ளை சிவப்பு, கருப்பு கலந்த ஆகிய நிறங்களும் கலந்து காணப் படும். வெள்ளையும் மஞ்சளும், சிவப்பும் மஞ்சளும், கருப்பும் மஞ்சளும் என்ற கலப்பு நிறங்களிலும் கிடைக்கின்றது. ராகு அஷ்டோத்திர சத நாமாவளியில் 19வதாக கோமேத ஆபரண ப்ரியாய நமஹ என்ற தொடர் காணப்படுகின்றது. எனவே இது ராகுக்குரிய ராசிக்கல் ஆகும். ராகுக்குரிய சதயம் சுவாதி திருவாதிரை நட்சத்திரங்களுக்கு ஏற்ற ரத்தினம் கோமேதகம் ஆகும்.

இது ஒரு சிலிகேட் கனிமம். இது சாய் சதுர அமைப்பில் அல்லது கன சதுரம் அமைப்பில் இருக்கும். இதனுடைய ஒளிவிலகல் சற்று தாறுமாறாக இருப்பதுண்டு. அதனால்தான் எதிர் திசையில் பயணிக்கின்ற ராகுக்கு உகந்த ரத்தினமாக இதனை உறுதி செய்துள்ளனர்.

சிறந்ததும் தீயதும்

தேன் குமிழ்கள் / தேன் துளிகள் போன்று காணப்பட்டால் அந்தக் கல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக்கல் மிகவும் வலிமை வாய்ந்தது. வெள்ளியிலும் தங்கத்திலும் ‘ஓபன் கட்’ (open cut) ஆக செய்து மோதிரமாகவும் கழுத்தில் டாலராகவும் அணியலாம்.

எங்குக் கிடைக்கிறது?

தமிழகத்தில் தூத்துக்குடி கடலோரப்பகுதிகளில் கோமேதகத் தாது ஏராளமாக கிடைக்கின்றது. இது தவிர பர்மா, இலங்கை, சீனா, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றது. அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தின் ரத்தினமாக கார்னெட் எனப்படும் இக்கோமேதகம் விளங்குகிறது.

என்னென்ன நோய்கள் தீரும்?

பதார்த்த குண சிந்தாமணி பித்தநோய் தீருவதற்கு கோமேதகம் அணியலாம் என்கின்றது. உடலின் தேஜஸ் அதிகரிக்கவும், மலச்சிக்கல் நீங்கவும் தோல் தொடர்பான வியாதிகள் சொரியாசிஸ், குஷ்டரோகம், வெண்குஷ்டம், சிரங்கு, கொப்புளங்கள் கட்டி போன்றவை குணமடைவதற்கும் கோமேதகமும் உறுதுணையாகும்.

ராகு தோலுக்கு உரிய கிரகம் என்பதால் ராகு திசை நடக்கும்போதும் ராகு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பொதுவாக தோல் உபாதைகள் காணப்படும். இவர்கள் பிறந்ததிலிருந்து கோமேதகக் கல்லை மோதிர விரல் அல்லது நடு விரலில் அணிவது சிறப்பு.

கோமேதகக் கல் பதித்த மோதிரத்தைக் குறிப்பாக திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரங்களில் அவசியம் அணிந்துகொள்ள வேண்டும். ராகுதிசை, ராகுபுத்தி நடப்பவர்களும் அணியலாம். அதற்கு முன்பு நல்ல ஜோதிடரையும் ரத்ன சாஸ்திர நிபுணரையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

பகை விலகும்

ராகு ப்ரீத்தி செய்யும்போது சத்ரு நாஸ்தி ஏற்படும். பகைவர்கள் அழிந்து போவார்கள். நம்மை விட்டு ஆகாதவர்கள் விலகிச் செல்வார்கள். உஷ்ணமான கரும்பாம்பின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு ஜாதகர் வரும்போது அவருடைய உடம்பிலும் உஷ்ணம் அதிகரித்து பித்தம் உயரும். எனவேதான் பதார்த்த குண சிந்தாமணி என்ற மருத்துவ நூல் பித்தத்தைக் குறைக்க கோமேதகம் அணிய வேண்டும் என்று ஆலோசனை வழங்குகின்றது.

பித்த சரீரம் கொண்டவர்கள் பித்தப்பை கல், மஞ்சள் காமாலை, அதிகாலையில் வாயில் உமிழ் நீர் மஞ்சளாக சுரத்தல், பித்தம் அதிகரித்து தலை கிறுகிறுப்பு மயக்கம் ஏற்படுதல் போன்ற உபாதைகளினால் அவதிப்படுவோர் கோமேதகம் அணிவது நல்லது. கண் திருஷ்டி விலகுவதற்கும் கோமேதகம் உதவும். இவற்றால் துக்க நிவர்த்தியாகி காரிய சித்தி உண்டாகும். நம்மை அறியாமல் நம் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் மன அழுத்தம் விலகி மனம் லேசாகும்.

அப்போது சிந்தனைகள் கூர்மையடைந்து நம்முடைய செயல்பாடுகள் வெற்றியைத் தரும். ராகுவின் ஒரு முக்கிய பலன் தூக்கமின்மை. ராகு திசை நடக்கும் போதும் ராகு நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் 12ஆம் இடத்தில் ராகு இருப்பவர்களுக்கும் தூக்கமின்மை ஒரு முக்கியப் பிரச்னையாக இருக்கும். இவர்களுக்கு கோமேதகம் நல்ல நிவாரணம் அளிக்கும். நிம்மதியான தூக்கம் நிதானமான சிந்தனைகளை உருவாக்க உதவும். தூக்கம் இல்லாவிட்டால் சிந்தனையில் குழப்பமும் செயல்பாட்டில் பதற்றமும் ஏற்படும். எனவே சிந்தனையும் செயல்பாடும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் கோமேதகக்கல் அணிய வேண்டும்.

அந்நிய தேச வாசம் / பரதேசம்

ஜாதகத்தில் ராகு வலுவாக இருந்தால் ஒருவர் பர (வேற்று) தேசம் போய் பிழைக்க நேரிடும். ராகுவின் வலிமையை அதிகரிப்பதற்கு கோமேதகக் கல் அணியலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது ஒரு அவயோகம் ஆகும். அதுவும் நடக்கும்.

குழந்தைகளுக்கு என்ன செய்யலாம்?

குழந்தைகளுக்கு அல்லது சிறுவர் சிறுமிகளுக்கு சிறுவயதிலிருந்தே கோமேதகம் மோதிரம் அணிவிப்பது. கோமேதகக் கல் பதித்த தாயத்துகளை இடுப்பில் கருப்புக் கயிறில் கட்டிவிடலாம். பள்ளிகளில் நகை போட அனுமதி இல்லாத சூழ்நிலையில் இவ்வாறு செய்வது பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் சிந்தனையில் தெளிவையும் வழங்கும். சிலப்பதிகாரத்தில் ஊர்காண் காதையில் இரு வேறு உருவவும் என்ற தொடர் கோமேதகத்தைக் குறிக்கின்றது. அதாவது இரண்டு வித வண்ணங்கள் ஊடுருவி இருக்கும் ரத்தினம் என்று இதற்குப் பொருள். எனவே இதனை தேன்நிறத்தில் (மஞ்சளும் காப்பி கலரும் கலந்த) இருக்கும் கல் என்று அழைக்கின்றோம்.

நல்ல கல்லை அறிவது எப்படி?

நல்ல கோமேதகத்தை தீயில் வாட்டினால் அதன் நிறம் மாறிக் கொண்டே வரும். ஆனால் மட்டமான கோமேதகம் என்றால் மஞ்சள் நிற கண்ணாடி போல் தீயில் வாட்டினால் புகை படியுமே தவிர அதனுடைய பிரதானமான மஞ்சள் நிறம் மாறாது.

ஆசையைத் தூண்டும் கிரகம் ராகு

ராகு லௌகீக ஆசைகளைத் தூண்டுபவன். மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளையும் தூண்டி அவற்றைப் பெறுவதற்கான வேகத்தை அதிகரிப்பான். ஆசைப்பட்டதைப் பெறக்கூடிய முயற்சிகளில் ஒருவரை வெறியோடு ஈடுபடுத்திப் பின்பு கடைசியில் இவை எல்லாம் மாயை என்ற புத்திமதியை வழங்கிச் செல்வான். இவ்வாறு ஆசைகள் ஏற்படும்போது நல்ல ஆசைகள் நிறைவேறவும் தீய ஆசைகள் மனதை விட்டு அகலவும் அவனையே தஞ்சம் புகுந்து வணங்கி ஆராதிக்க வேண்டும்.

தொகுப்பு: பிரபா எஸ்.ராஜேஷ்

The post பகை விலக்கும் கோமேதகம் appeared first on Dinakaran.

Related Stories: