பாக். நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஜன.11 வேட்பாளர் இறுதிபட்டியல் வௌியீடு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. பாகிஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு கடைசியாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது 342 நாடாளுமன்ற தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுவரையின்கீழ் 6 தொகுதிகள் குறைக்கப்பட்டு தற்போது 336 தொகுதிகள் உள்ளன. இம்ரான் கான் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் டிசம்பர் 20 முதல் 23 வரை(3 நாட்கள்) வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் கடந்த 17ம் தேதி அறிவித்தது. ஆனால் பல்வேறு கட்சிகளின் கோரிக்கைப்படி வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் மேலும் 2 நாள்(நேற்று வரை) நீட்டிக்கப்பட்டது. இதன்படி வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. வேட்புமனுக்கள் இன்று முதல் டிச.30 வரை ஆய்வு செய்யப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 11ம் தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வௌியாகும். ஜனவரி 12 வரை வேட்பாளர்கள் தங்கள் மனுவை திரும்ப பெறலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் 3 தொகுதிகளில் போட்டியிடுவார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இம்ரான் கானின் பூர்வீக நகரமான மியான்வலி மற்றும் லாகூரில் உள்ள 2 தொகுதிகளில் அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் தோஷகானா ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள இம்ரான் கானின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி தலைவரும், 3 முறை பிரதமர் பதவி வகித்தவருமான நவாஸ் ஷெரீஃப், அவரது தம்பி ஷெபாஸ் ஷெரீஃப், யூசுப் ரசா கிலானி, ராஜா பர்வைஸ் அஷ்ரப் உள்ளிட்ட முன்னாள் பிரதமர்கள், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

The post பாக். நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு: ஜன.11 வேட்பாளர் இறுதிபட்டியல் வௌியீடு appeared first on Dinakaran.

Related Stories: