திருமானூரில் பாலின வன்முறைக்கு எதிரான பிரசார பேரணி

அரியலூர், டிச 24: அரியலூர் மாவட்டம், திருமானூரில் பாலின வன்முறைக்கு எதிரான பிரசார பேரணி நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி பிரசார பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்து, மகளிர் பாதுகாப்பு குறித்து பேசினார். பேரணிக்கு, திருமானூர் ஒன்றிய வட்டார அளவிலான குழு கூட்டமைப்பு செயலர் மேனகா தலைமை வகித்தார்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் கலாநிதி, மகளிர் திட்ட உதவி திட்ட மேலாளர்கள் சுரேஷ், ராஜ்குமார், வட்டார இயக்க மேலாளர் ராமலிங்கம், திமுக ஒன்றிய செயலாளர் அசோக் சக்ரவர்த்தி, ஊராட்சித் தலைவர் உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியானது, திருமானூர் பேருந்து நிலையம் அருகே தொடங்கி, பிரதான கடைவீதி வழியாகச் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலக
வளாகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள், குழந்தை திருமணத்தை ஒழிப்போம், குடும்ப வன்முறையை தடுப்போம், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம், புதுமைப் பெண் திட்டத்தைப் பரவலாக்குவோம் என்ன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக் கொண்டு முழக்கமிட்டவாறு சென்றனர். முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

The post திருமானூரில் பாலின வன்முறைக்கு எதிரான பிரசார பேரணி appeared first on Dinakaran.

Related Stories: