மழை எச்சரிக்கையை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை மையம் எதற்கு?, அதை மூடிவிடலாம் : அன்புமணி காட்டம்

நெல்லை : மழை எச்சரிக்கையை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை மையம் எதற்கு?, அதை மூடிவிடலாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அன்புமணி ராமதாஸ், மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நெல்லையில் நகர் பகுதிகளை விட கிராம பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லையை விட தூத்துக்குடியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம். சென்னை வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். அது தேவையில்லை, வேஸ்ட்.வானிலை மையம் செய்கிற வேலையை 5ம் வகுப்பு மாணவன் செய்வான்;

சில மாவட்டங்களில் கனமழை பெய்யும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனதான் எப்போதும் அறிவிக்கிறார்கள்; இது எங்களுக்கு தெரியாதா?. உலகமே நவீன தொழில்நுட்பத்திற்கு மாறிவருகிறது; இங்கு மட்டும் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நிலைதான் தொடர்கிறது. மழை எச்சரிக்கையை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை ஆய்வு மையம் எதற்கு?. தொழில்நுட்பம் மாறி வரும் நிலையில், சரியான அறிவிப்பை வானிலை மையம் தான் வெளியிட வேண்டும். காலநிலை மாற்றம் குறித்து நான் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறேன்.தாமிரபரணியில் அறிவித்ததை விட கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் பாதிப்பு அதிகம்.

மீண்டும் இதேபோல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அரசு முறையாக திட்டமிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ரூ.2000 கோடி முதல் கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசு நிவாரணமாக ரூ.25,000 வழங்க வேண்டும்,”என்றார்.இதனிடையே எண்ணூரில் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சவுமியா அன்புமணி நேரில் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதுபோன்ற எண்ணெய் கசிவு இனிவரும் காலங்களில் ஏற்படக்கூடாது என சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

The post மழை எச்சரிக்கையை சரிவர அளிக்கவில்லை எனில் சென்னை வானிலை மையம் எதற்கு?, அதை மூடிவிடலாம் : அன்புமணி காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: