செங்கல்பட்டு, வாலாஜாபாத்தில் மின்சிக்கன விழிப்புணர்வு பேரணி: உயரதிகாரிகள் பங்கேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, வாலாஜாபாத்தில் தேசிய மின்சிக்கன வாரவிழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், செங்கல்பட்டு மின்வாரியம் சார்பில் மின்சார சிக்கன வார விழா தொடர்பாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இருந்து மேற்பார்வை பொறியாளர் அருணாசலம் தலைமையில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருமிழிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள், அலுவலர்கள் 500க்கும் மேற்பட்டோர் மின்சிக்கனம், மின் சேமிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

இந்த பேரணி செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை, அழகேசன் சாலை, வேதாச்சலம் நகர், புதிய பேருந்து நிலையம் வழியாகச் சென்று, மீண்டும் செங்கல்பட்டு மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை வந்தடைந்தது. இந்நிகழ்வில் செங்கல்பட்டு கோட்டப் பொறியாளர் ரவிச்சந்திரன், மின்வாரிய அதிகாரிகள் மனோகரன், ‌மோகன், செந்தாமரை, பாலமுருகன், அல்லிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் காஞ்சிபுரம் தெற்கு கோட்ட வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தின் சார்பில், மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

பேரணிக்கு, காஞ்சிபுரம் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் பிரசாந்த் தலைமை தாங்கினார். வாலாஜாபாத் கோட்ட உதவி செயற்பொறியாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். இப்பேரணி வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தில் தொடங்கி பேருந்து நிலையம், ராஜவீதி, அண்ணா நகர், ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய விதிகள் வழியாகச் சென்று, பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாகவும், கடைகள் தோறும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மின்வாரிய அதிகாரிகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், ஒளிப் பெருக்கிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

The post செங்கல்பட்டு, வாலாஜாபாத்தில் மின்சிக்கன விழிப்புணர்வு பேரணி: உயரதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: