கவுண்டமாநதியில் வெள்ளப்பெருக்கு மேம்பால பணிகள் பாதியில் நிறுத்தம்

 

திருமங்கலம், டிச.20: கவுண்டமாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆலம்பட்டி அருகே புதிய மேம்பால பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லம் வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் தற்போது திருமங்கலத்திலிருந்து டி.கல்லுப்பட்டி, திருவில்லிபுத்தூர் வழியாக ராஜபாளையம் வரையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் சௌடார்பட்டி, திரளி வழியாக ஆலம்பட்டியை கடந்து சிவரக்கோட்டை வழியாக செல்லும் கவுண்டமாநதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத்துவங்கியது. இதில் ஆலம்பட்டி அருகே தற்போது இருக்கும் மேம்பாலத்திற்கு அருகே நான்குவழிச்சாலைக்காக புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கவுண்டமாநதியின் மேல் இந்த புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்மழையால் கவுண்டமாநதியில் தண்ணீர் பெருக்கெடுத்து புதிய பாலத்தின் கீழே ஓடவே நான்குவழிச்சாலை பாலபணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் பணிகளை தற்காலிகமாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர். தண்ணீரின் வேகம் குறைந்த பின்பே பாலபணிகளை தொடர முடியும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

The post கவுண்டமாநதியில் வெள்ளப்பெருக்கு மேம்பால பணிகள் பாதியில் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: