திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதை சீரமைப்பு பணிகள் தீவிரம்: அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு

திருத்தணி:திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதை சீரமைப்பு பணிகளை அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார். திருத்தணி முருகப்பெருமானின் 5ம் படை வீடாக போற்றப்படும் திருத்தலமாகும். திருத்தணி முருகன் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் சாலை பக்கவாட்டு தடுப்பு சுவர் இடிந்து விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த 5ம் தேதி முதல் மலைக் கோயிலுக்கு கனரக வாகனங்கள் சென்று வர அனுமதி தடை விதிக்கப்பட்டது.

மண் சரிவு அதிகரித்ததால், மலைப் பாதை முழுமையாக மூடப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. மலை கோயிலுக்கு திருப்படிகள் வழியாக மட்டுமே சென்று வர அனுமதிக்கப்படுவதால் முதியோர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் வரும் 31ம் தேதி திருப்படி திருவிழாவும், ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூஜையும் நடக்கவுள்ள நிலையில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சு.ஸ்ரீதரன் தலைமையில் கோயில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரா ரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் நேற்று மலைப் பாதையில் ஆய்வு மேற்கொண்டனர்.

சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க தேவையான ஆலோசனைகளை வழங்கினர். அப்போது, சாலைப் பணிகள் முழுமையாக முடிந்த பின் மலைக் கோயிலுக்கு வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்படும். அதுவரை படிக்கட்டுகளில் மட்டுமே பக்தர்கள் மலைக் கோயிலுக்கு சென்று வர முடியும் என்று அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

The post திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதை சீரமைப்பு பணிகள் தீவிரம்: அறங்காவலர் குழு தலைவர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: