மகர ராசியில் இருந்து கும்பத்துக்கு பெயர்ச்சி: திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா


காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் நாளை மாலை சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக புகழ் பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா நாளை(20ம் தேதி) நடைபெற உள்ளது. மாலை 5.20 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். சனி பெயர்ச்சி விழாவுக்கு சுமார் 5 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுமார் 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் பாதுகாப்பாக, நெரிசலின்றி தரிசனம் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கோயில், நளன் குளம், வீதிகள் மற்றும் கோயில் பிரகாரங்களில் 12 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும் எந்த ஆண்டும் இல்லாத வகையில் 150 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் டிரோன் கேமராக்களும் ஈடுபடுத்தப்பட உள்ளது. காவல்துறை மூலம் ”மே ஐ ஹெல்ப் யூ” மையங்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல மொழிகள் தெரிந்த போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

நளன் குளத்தில் ஏற்கனவே இருந்த பழைய நீரை வெளியேற்றி, களிமண், சேறு சகதியை அகற்றி தற்போது புதிய நீர் விடப்பட்டு உள்ளது. மேலும் முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் குளிக்க ஏதுவாக ஷவரும் அமைக்கப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் தேவஸ்தானத்தின் மூலம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது. < https://thirunallarutemple.org/sanipayarchi/darshan_register > என்ற தேவஸ்தான இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் டிக்கெட்டில் ரூ.1000, 600 மற்றும் 300 என தரிசன கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே தற்காலிக தீயணைப்பு நிலையங்கள், சிறப்பு தரிசன கட்டணத்தில் உள்ள கியூ.ஆர் கோடு மூலம் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வழிகாட்டுதல் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு கல்லூரிகள், பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர் பக்தர்களின் வருகைக்காக தமிழக அரசு போக்குவரத்து துறை மூலம் சிறப்பு பேருந்துகள் திருநள்ளாறுக்கு இயக்கப்பட உள்ளது.

The post மகர ராசியில் இருந்து கும்பத்துக்கு பெயர்ச்சி: திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா appeared first on Dinakaran.

Related Stories: