கொள்ளிடத்தில் வேணுகோபால் சுவாமி கோயில் குடமுழுக்கு நடத்த வேண்டும்

கொள்ளிடம்,டிச.18: கொள்ளிடம் வேணுகோபாலசாமி கோயிலை குடமுழுக்கு நடத்த பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அக்ரஹார தெருவில் சத்தியபாமா, ருக்மணி சமேத வேணுகோபாலசாமி கோயில் உள்ளது. உற்சவராக ராமர், லெட்சுமணன், சீதை ஆகியோரும் நின்ற கோலத்தில் இருந்து காட்சி அளித்து வருகின்றனர். ராமர் வில்லேந்திய நிலையில் இங்கு இருந்து வருவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த விக்கிரகங்கள் மிகப் பழமையானதும், விலை மதிப்பு மிக்கதும், ஐம்பொன்னாலான விக்கிரகமாக இருந்து வருவதால் பாதுகாப்பு கருதி இந்த ஐம்பொன் சிலைகள் கொள்ளிடம் அருகே திருமயிலாடி சுந்தரேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இக்கோயில் ராமர் கோயில் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோயில் கற்கோயிலாக இருந்து வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த கோயில் தொல்லியல் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு சாலிகிராம கற்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வருவது மேலும் சிறப்பான ஒன்றாக அமைந்து வருகிறது. 108 திவ்ய தேசங்களில் மட்டுமே சாலிகிராம கற்கள் பெருமாலாக பாவித்து பூஜிக்கப் பட்டு வரும் நிலையில் இக் கோயிலிலும் சாலிகிராம கற்கள் கருவறையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இக்கோயில் கடந்த 1992ம் ஆண்டு குடமுழக்கு விழா செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 32 வருடங்களுக்கு மேலான நிலையில் இதுவரை குடமுழுக்கு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் இங்கு தினந்தோறும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறும் வகையில் வழிபாடும் செய்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வரும் இக்கோயில் இதுவரை குடமுழுக்கு செய்யாமல் இருந்து வருகிறது. எனவே இக்கோயிலை திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கொள்ளிடத்தில் வேணுகோபால் சுவாமி கோயில் குடமுழுக்கு நடத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: