எண்ணூரில் எண்ணெய் கழிவு கலந்த விவகாரம் தீர்ப்பாயத்தில் இன்று ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு: மாசுக்கட்டுபாட்டு வாரியம், சிபிசிஎல் தாக்கல் செய்கிறது

சென்னை: எண்ணூரில் கழிவு எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் மாசுக்கட்டுபாட்டு வாரியம் மற்றும் சிபிசிஎல் தரப்பில் ஆய்வு அறிக்கைகள் இன்று சமர்ப்பிக்கப்படுகின்றன. மிக்ஜாம் புயல் மழையின் போது சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து கழிவு எண்ணெய் கடலில் கொட்டப்பட அது மழைநீருடன் கலந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் வேகமாக பரவி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணை செய்தது.

எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு அதற்கான முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஎல் தரப்பில் பசுமை தீர்பாயத்தில் கூறுகையில், எண்ணூரில் கொட்டப்பட்ட எண்ணெயை இயந்திரங்கள் மூலமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது, மும்பையில் இருந்து நிபுணர் குழு மூலம் ஆலோசனை பெறப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.

அதேபோல், தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து வந்த தண்ணீர் சிபிசிஎல் வளாகத்திற்குள் புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பில்ட்டரை மீறி ஒரு மீட்டர் வரை தண்ணீரின் அளவு உயர்ந்ததால், எண்ணெய் வெளியேறிவிட்டது. இதனால் மீனவர்கள் தற்போது வரை மீன்பிடி செல்ல முடியவில்லை, மீனவர்களுக்கான இடைக்கால நிவாரண தொகையை சிபிசிஎல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாதங்கள் இதுவரை தீர்ப்பாயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் எண்ணூர் முகத்தூவாரத்தில் கழிவு எண்ணெய் கொட்டப்பட்ட விவகாரத்தில் 4வது முறையாக பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று விசாரணை மேற்கொள்ள உள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சிபிசிஎல் நிறுவனம் தங்களின் முழு ஆய்வு அறிக்கையினை இன்று சமர்ப்பிக்கின்றன. இறுதிக்கட்ட அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதால் இந்த பேரிடருக்கு யார் காரணம், பாதிப்பு எவ்வளவு ஏற்பட்டு உள்ளது, நிவாரணம் எவ்வளவு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

The post எண்ணூரில் எண்ணெய் கழிவு கலந்த விவகாரம் தீர்ப்பாயத்தில் இன்று ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு: மாசுக்கட்டுபாட்டு வாரியம், சிபிசிஎல் தாக்கல் செய்கிறது appeared first on Dinakaran.

Related Stories: