அமெரிக்காவில் ஒரு ‘இந்து’ எப்படி ஜனாதிபதியாக முடியும்? விவேக் ராமசாமி பதில் வைரல்

நியூயார்க்; அமெரிக்காவில் ஒரு இந்து எப்படி ஜனாதிபதியாக முடியும் என்ற கேள்விக்கு விவேக் ராமசாமி அளித்த பதில் வைரலாகி உள்ளது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், ஓஹியோவில் பிறந்த தொழிலதிபருமான விவேக் ராமசாமி களத்தில் உள்ளார். சிஎன்என் டவுன்ஹால் நிகழ்ச்சியில் விவேக் ராமசாமியின் இந்து மத நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அயோவா வாக்காளர் கன்னி மிட்செல் இதுபற்றி கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்வியில், ‘எங்கள் நாட்டை உருவாக்கிய தலைவர்கள் எங்கள் நாட்டை அடிப்படையாகக் கொண்ட மதத்துடன் உங்கள் இந்து மதம் ஒத்துப் போகாததால், நீங்கள் எங்கள் ஜனாதிபதியாக இருக்க முடியாது என்று வலியுறுத்துபவர்களுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு விவேக் ராமசாமி பதில் அளித்து கூறுகையில்,’ நான் ஒரு இந்து. நான் எனது அடையாளத்தை போலியாக மாற்ற மாட்டேன். இந்து மதமும், கிறிஸ்தவமும் பொதுவான மதிப்பையே பகிர்ந்து கொள்கின்றன.

எனது மத நம்பிக்கைகளின் அடிப்படையில், ஒவ்வொரு நபரும் ஒரு காரணத்திற்காக இங்கே இருக்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அந்த காரணத்தை நிறைவேற்றுவது நமது தார்மீகக் கடமையாகும். ஏனென்றால் கடவுள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்கிறார். கடவுள் நம் மூலம் பல்வேறு வழிகளில் செயல்பட்டாலும், நாம் அனைவரும் சமம் தான்.

எனது வளர்ப்பு மிகவும் பாரம்பரியமானது. திருமணங்கள் புனிதமானது, குடும்பங்கள் சமூகத்தின் அடித்தளம் என்று என் பெற்றோர் எனக்குக் கற்றுக் கொடுத்தனர். அந்த மதிப்புகள் வேறு எங்கிருந்தோ அல்லவா? இந்த நாட்டில் கிறிஸ்தவத்தை பரப்புவதற்கு நான் சிறந்த ஜனாதிபதியாக இருப்பேனா என்று என்னை கேட்டால், இல்லை அதற்கு நான் சரியான தேர்வாக இருக்க மாட்டேன். ஆனால் அமெரிக்கா நிறுவிய மதிப்புகளை இன்னும் உயர்த்த நான் உறுதியாக உழைப்பேன்’ என்றார். விவேக் ராமசாமி அளித்துள்ள இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post அமெரிக்காவில் ஒரு ‘இந்து’ எப்படி ஜனாதிபதியாக முடியும்? விவேக் ராமசாமி பதில் வைரல் appeared first on Dinakaran.

Related Stories: