தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற “நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்” குழு ஆலோசனை கூட்டம்

சென்னை: பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் தலைமையில், “நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்“ குழு ஆலோசனை கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை 5வது தளம், கூட்ட அரங்கில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் முன்னிலையில், “நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்“ குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று (12.12.2023) நடைபெற்றது.

குழுவின் உறுப்பினர், செயலாளர் பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் பி.சந்தரமோகன், வரவேற்புரை நிகழ்த்தினார்கள். இக்குழு ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்து, பொதுப்பணித்துறை அமைச்சர் உரையாற்றினார். அப்பொழுது, முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர், மூத்த அமைச்சர்களின் தலைமையில், 12 குழுக்களை அமைத்துள்ளார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான “பகுத்தறிவு சீர்திருத்தச் செம்மல் கலைஞர்“ குழு சார்பில் அண்மையில் வேலூரில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. நம்முடைய “நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்“ குழு சார்பில், சேலத்தில் 22.12.2023 அன்று விழா நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக, அமைச்சர்கள் மழை நிவாரணப் பணிகளில், ஒரு வாரத்திற்குமேல், ஈடுபட வேண்டியிருந்ததால், “நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்“ குழுவின் விழாவை 22.12.2023 அன்று நடத்துவதற்குப் பதிலாக, 27.12.2023 (புதன் கிழமை) அன்று நடத்தலாம் என அமைச்சர் தெரிவித்த ஆலோசனைகளை உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டார்.

இந்த குழுவின் சார்பாக, நடைபெற்ற முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் தெரிவித்த ஆலோசனைகளின்படி, சேலத்தில் காலையில் புகைப்பட கண்காட்சி, அதனைத் தொடர்ந்து கருத்தரங்கம், நண்பகல் உணவுக்குப் பின் கவியரங்கம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, இன்று நடைபெறக்கூடிய இந்தக் கூட்டத்தில், குழு உறுப்பினர்கள், விழா நடைபெறும் இடம், புகைப்படக் கண்காட்சி, கருத்தரங்கம், கவியரங்கம் ஆகியவற்றிற்கு யார் யாரை அழைப்பது என்பது குறித்து ஆலோசனைகள் தெரிவிக்குமாறு குழு உறுப்பினர்களை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

அப்போது குழு உறுப்பினர்கள் விழா நடைபெறும் இடத்தை தேர்வு செய்வது குறித்து கூறியபோது, 1000 பேர் வரை அமரக்கூடிய இடவசதி, கண்காட்சி நடத்துவதற்குரிய இடவசதி, கார்கள் நிறுத்துவதற்கு இடவசதி ஆகியவற்றிற்கு பொருத்தமான ஓர் இடத்தை தேர்வு செய்யலாம் என ஆலோசனைகள் கூறினர்.
கருத்தரங்கத்திலும், கவியரங்கத்திலும் பங்குபெற யார் யாரை அழைக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கருத்தரங்கத்தை தொடர்ந்து, மதிய உணவுக்குப்பின் 2 அல்லது 3 மணிநேரம் நடைபெறக்கூடிய கலைநிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யலாம் என ஆலோசனை கூறப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கலைநிகழ்ச்சியை தொடர்ந்து, கவியரங்கம் நடத்திடவும், திட்டமிடப்பட்டது.

பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் திரு.கே.பி.சத்தியமூர்த்தி அவர்களின் நன்றியுரைக்குப் பின் ஆலோசனை கூட்டம் நிறைவுப் பெற்றது. இக்குழுக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை சிறப்பு அலுவலர் இரா.விஸ்வநாத், குழு உறுப்பினர்கள் ஆர்.சுப்பிரமணியன், ரூப்மதி, ஓவியர் மருது, கவிஞர் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், ஸ்தபதி செல்வநாதன் உட்பட பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலர் பங்கு பெற்றனர்.

The post தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற “நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்” குழு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: