மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 68 ஆயிரம் 595 குடும்ப அட்டைகள் உள்ளன. 1084 கடைகள் மூலம் பொதுவிநியோக பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் 489 முழுநேர ரேஷன் கடைகளும், 585 பகுதி நேர ரேஷன் கடைகளும், மகளிர் மட்டும் நடத்தும் 10 ரேஷன் கடைகளும் உள்ளன. பொதுமக்களின் வசதிக்காக, பல்வேறு இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தர்மபுரி தாலுகா, அதகப்பாடி, சின்னதடங்கம் செந்தில் நகர் மக்களின் வசதிக்காக பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்தார். இந்த ரேஷன் கடையில், தர்மபுரி மாவட்டத்தில் முதன்முறையாக கியூஆர் கோடு மூலம் பேடிஎம், கூகுள் பே போன்றவற்றில் பணம் செலுத்துவதற்கு வசதியாக, இணைய வழி பண பரிவர்த்தனை சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
ரேஷன் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு இணைய வழி மூலம் ஸ்கேன் செய்து, பணம் செலுத்தி வருகின்றனர். இதனால் சில்லரை பிரச்னை ஏற்படுவதில்லை. ரேஷன் கடைகளில் ஒஏஎஸ்ஒய்எஸ் என்ற கணினியில் ரேஷன் கார்டு ஸ்கேன் செய்து, பெருவிரல் பதிவு செய்த பின்னர், பொதுவிநியோக பொருட்கள் வழங்கப்படும். பெருவிரலில் காயம் அடைந்தவர்கள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பொருட்கள் பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. அதை தவிர்க்க அரசு கருவிழி பதிவு செய்து பொருட்கள் வாங்க அறிமுகம் செய்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் முதன்முறையாக ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு மூலம் பொது விநியோக பொருட்கள் வழங்கும் நடைமுறை நேற்று அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 70 ரேஷன் கடைகளுக்கு கருவிழி பதிவு செய்யும் கருவி வழங்கப்பட்டுள்ளது. நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சாந்தி, 70 முழுநேர ரேஷன் கடை விற்பனையாளர்களிடம், கருவிழி பதிவு செய்யும் கருவி மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பாயின்ட் ஆப் சேல் மெஷினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜகுரு, மண்டல மேலாளர் தேன்மொழி, அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 1084 ரேஷன் கடைகளில், 70 கடைகளில் மட்டும் முதல்கட்டமாக கருவிழி பதிவு செய்யும் கருவி வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். முதன்முறையாக, தர்மபுரி மாவட்டத்தில் 70 ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது,’
என்றனர்.
The post மாவட்டத்தில் முதல்கட்டமாக 70 ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் appeared first on Dinakaran.