தண்டையார்பேட்டை: எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவி வழங்கிய நிகழ்ச்சியில், நெரிசலில் சிக்கி சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ஆர்டிஓ விசாரணைக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 9ம் தேதி நிவாரண உதவிகளை வழங்கினார். அதன்படி, கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில், வட சென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஏற்பாட்டில் 2,000க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது, முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததால், கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 3வது தெருவைச் சேர்ந்த வேலு – சொக்கம்மாள் தம்பதியின் மகள் யுவஸ்ரீ, தனது அத்தை லட்சுமியுடன் சேர்ந்து, நிவாரண பொருட்களை வாங்கச் சென்றபோது, கூட்ட நெரிச்சலில் சிறுமி கீழே விழுந்து மிதிபட்டாள். படுகாயமடைந்த சிறுமி யுவ, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்து, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலையில், காசிமேடு சுடுகாட்டில் யுவயின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில் சிறுமி உயிரிழிந்த விவகாரம் தொடர்பாக, ஆர்டிஓ விசாரணைக்கு சென்னை கலெக்டர் ரேஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் இப்ராஹிம் தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
The post எடப்பாடி நிவாரண உதவி நிகழ்ச்சியில் நெரிசலில் சிறுமி இறந்த விவகாரம் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு: கலெக்டர் நடவடிக்கை appeared first on Dinakaran.
