அதிமுக பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறவில்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் விளக்கம்

சென்னை: அதிமுக பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு பன்னீர்செல்வம் தரப்பினருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தீர்ப்பானது 2 நீதிபதிகள் அமர்வில் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரதான வழக்கானது நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மேல்முறையீட்டு வழக்கில் இதுவரை தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.

அதேசமயம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை ஒத்திவைப்பதாக இருந்தால் பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். இதற்கு பன்னீர்செல்வம் தரப்பில், தற்போது வரை அதிமுக பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

The post அதிமுக பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறவில்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: