கடலூர், டிச. 9: கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே சென்டர் மீடியன் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர்-புதுச்சேரி போக்குவரத்து வசதிக்காக ஆல்பேட்டையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாலம் கட்டப்பட்டது. வாகனங்களின் பெருக்கத்தின் காரணமாக, இந்த குறுகிய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் அதன் அருகிலேயே புதிதாக ஒரு பாலம் கட்டப்பட்டு அந்த பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். பழைய இரும்பு பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அதில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்பட்டது. மேலும் பாலம் உறுதி தன்மையை இழந்ததால், அதை இடித்து விட்டு தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், அந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
மேலும் தற்போது சென்டர் மீடியன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆல்பேட்டை செந்தாமரை நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே சென்டர் மீடியன் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், சோதனை சாவடி அருகே சென்டர் மீடியன் அமைத்தால் எங்கள் நகருக்கு நாங்கள் சுற்றி செல்ல வேண்டியதாக உள்ளது. எனவே எங்கள் நகருக்கு செல்ல வழி அமைத்துவிட்டு அதன் பிறகு சென்டர் மீடியன் அமைக்க வேண்டும், என்றனர்.
அப்போது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும்போது, இந்த பணிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இப்போது திடீரென மாற்றி அமைக்க முடியாது. நீங்கள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சென்று முறையிடுங்கள், என்று கூறினர். இதை கேட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட போவதாக கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே தடுப்பு கட்டை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம் பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.
