பண்ருட்டி, டிச. 9: பக்கத்து வீட்டு பெண்கள் குளிப்பதை ரகசியமாக படம் எடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். பண்ருட்டி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 28 வயது பெண் மற்றும் இவரது சகோதரி ஆகிய இருவரும் தங்களது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் நேற்று காலை குளித்து கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஏகாம்பரம் மகன் கதிர்வேல் (42) என்பவர் தனது செல்போனில் இவர்களை ரகசியமாக போட்டோ எடுத்துள்ளார். அப்போது திடீரென செல்போனில் அழைப்பு வந்ததால், செல்போன் சத்தம் கேட்டு திரும்பிய பெண்கள், தாங்கள் குளிப்பதை பக்கத்து வீட்டு வாலிபர் படம் பிடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினர். வர்களது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த 28 வயது பெண்ணின் கணவரிடம் இதை கூறியுள்ளனர். ஏன் பெண்கள் குளிப்பதை படம் எடுக்கிறாய் என அவர் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல், அவரையும், அவரது மனைவி மற்றும் பெண்ணின் சகோதரியையும் அசிங்கமாக திட்டி அடித்துள்ளார். இது குறித்து 28 வயது பெண் கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கதிர்வேலுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post பெண்கள் குளிப்பதை போட்டோ எடுத்தவர் கைது appeared first on Dinakaran.
