ஆண்களுக்கு நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்

 

கோவை, டிச. 2: கோவை மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம்கள் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த இரண்டு நாட்களில் கோவை அரசு மருத்துவமனை, சூலூர் அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் நடந்தது. இந்த முகாமின் மூலம் அரசு மருத்துவமனையில் 2 பேர், சூலூர் மருத்துவமனையில் 2 பேர், சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 6 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதில், மாவட்ட குடும்ப நலம் மற்றும் ஊரக நலப்பணிகள் (பொ) துணை இயக்குனர் சரவணபிரகாஷ், மாவட்ட மக்கள் கல்வி தகவல் தொடர்பு அலுவலர் கிருஷ்ணகுமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ராணி, புள்ளிவிவர உதவியாளர் பிரபாகர், அரசு மருத்துவமனை ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை 5 நிமிடத்தில் பயிற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு இலவசமாக செய்யப்படுகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி எவ்வித பக்க விளைவுகளின்றி செய்யப்படும் இந்த சிகிச்சை பெறும் ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,100 மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் ரூபாய் ஆயிரம், தேவி டெக்ஸ்டைல்ஸ் சார்பில் ரூபாய் ஆயிரம் என மொத்தம் 3 ஆயிரத்து 100 வழங்கப்படுகிறது.

அதன்படி, முகாமில் அறுவைசிகிச்சை செய்து கொண்ட ஆண்களுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டது. இந்த சிகிச்சையை ஏற்பதால் இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கோ, கடின உழைப்பிற்கோ தடை இருக்காது. பெண்களுக்கு செய்யப்படும் குடும்பநல அறுவை சிகிச்சையினை விட பன்மடங்கு எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. 59 வயது வரையுள்ள ஆண்கள் இந்த சிகிச்சையை செய்து கொள்ளலாம்.

The post ஆண்களுக்கு நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: