காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு

சென்னை: டெல்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தேசிய தலைவர் கார்கேவை சந்தித்து பூத் கமிட்டி மாநாடு நடத்துவது உள்ளிட்ட தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். மல்லிகார்ஜூன கார்கேவின் 50 ஆண்டுகால தேர்தல் அரசியல் பற்றிய புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லி சென்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வெளியிட்டார். அந்த புத்தக பிரதிகளை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பெற்றுக் கொண்டார். நேற்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து எடுத்து கூறினார்.

மல்லிகார்ஜூன கார்கேவையும் அவர் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. கும்பகோணம், திருவள்ளூர், சிவகாசி, நாகர்கோவில் திருநெல்வேலி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளில், பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்தியது குறித்தும் விளக்கியதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தொகுதி பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான பட்டியலையும், காலியாக உள்ள 7 மாவட்ட தலைவர்கள் பதவிக்கு நியமனம் செய்யும் பட்டியலையும் கார்கேவிடம், கே.எஸ்.அழகிரி பரிந்துரை செய்து மேலிடத்தில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அதேபோன்று நெல்லை மாவட்டத்தில் நடந்த பயிற்சி பாசறை கூட்டத்துக்கு சென்ற போது, கே.எஸ்.அழகிரிக்கு கருப்பு கொடி காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சத்தியமூர்த்திபவனில் நடைபெறும் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் முன்னாள் தலைவர்கள் சிலர் பங்கேற்காமல் இருப்பது தொடர்பாகவும் மேலிடத்தில் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

The post காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: