தெலங்கானாவில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதால் வெற்றி சான்றிதழ் வாங்கியவுடன் எம்எல்ஏக்களை தூக்க காங். வியூகம்: கர்நாடகா துணை முதல்வர் ஏற்பாடு

ஐதராபாத்:தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதால், காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களது வெற்றி சான்றிதழ் வாங்கியவுடன், அவர்களை தூக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்ட வாய்ப்புள்ளதாகவும், காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கையின் போது, காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும்பட்சத்தில் எம்எல்ஏக்களை பாதுகாக்க காங்கிரஸ் தலைமை வியூகங்களை வகுத்து வருகிறது. காரணம் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், மாற்றுக் கட்சிக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக வெற்றிப் பெற்றவர்களை வேறு நகரங்களுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்கள் பெங்களூரு அல்லது வேறு நகரத்திற்கு அழைத்து செல்லப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தெலங்கானா பிரிவு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிபெறும். வாக்கு எண்ணிக்கை நாளில், எங்களது எம்எல்ஏக்களை வேறு நகரங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்படும்.

காங்கிரஸுக்கு 70 தொகுதிக்கும் குறைவாக சீட் கிடைத்தால், புதியதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பெங்களூரு அல்லது வேறு நகரத்திற்கு அழைத்து செல்வோம். அவர்களை ஒரு ஓட்டல் அல்லது ரிசார்ட்டில் தங்கவைப்போம். 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலங்கானா சட்டசபையில் பெரும்பான்மை பலத்திற்கு 60 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், சில கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரசுக்கு ஆதரவாக தெரிவித்துள்ளன. எனவே தேர்தல் அதிகாரிகளிடமிருந்து ெவற்றி சான்றிதழ்களைப் பெற்ற பிறகு, சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களை வேறு இடங்களுக்கு அழைத்து செல்வோம். இந்தப் பணியை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மேற்கொள்வார்’ என்று அவர்கள் கூறினர்.

The post தெலங்கானாவில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதால் வெற்றி சான்றிதழ் வாங்கியவுடன் எம்எல்ஏக்களை தூக்க காங். வியூகம்: கர்நாடகா துணை முதல்வர் ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: