குரோம்பேட்டை நியூகாலனி பகுதியை சங்கரய்யா நகர் என பெயர் மாற்றம் செய்யவேண்டும்: தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

தாம்பரம்: குரோம்பேட்டை நியூகாலனி பகுதியை சங்கரய்யாநகர் என பெயர் மாற்றம் செய்யவேண்டும் என தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாநகராட்சியின் 2வது மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதில், தமிழ்நாடு முதலமைச்சரால் தகைசால் தமிழர் விருது பெற்ற சுதந்திர போராட்ட வீரரும், சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக பாடுபட்டவருமான என்.சங்கரய்யா கடந்த 15.11.2023ல் மறைந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் 15.7.1922ம் ஆண்டு பிறந்து பள்ளி படிப்பை முடித்து 1937ம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர் மீடியட் வகுப்பில் சேர்ந்து மாணவ பருவத்திலே இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திலும், விடுதலை போரிலும் பங்கேற்ற தலைவராக விளங்கினார்.

1940ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் நெல்லையில் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றபோது கைது செய்யப்பட்டார். பட்டப்படிப்பின்போது தேர்வுக்கு 15 நாள் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1942ல் 21வது வயதில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் அன்றைய மதுரை மாவட்ட செயலாளராக அரசியல் பணியை துவங்கினார். விடுதலை போராட்டத்தின்போது 8 ஆண்டு சிறையில் இருந்துள்ளார். கலை இலக்கியத்தில் ஆர்வமுள்ள முற்போக்கு சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளராக விளங்கினார்.

சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட என்.சங்கரய்யா, இறுதி நாட்களில் வாழ்ந்த பகுதியான குரோம்பேட்டை நியூகாலனி பகுதியை சங்கரய்யா நகர் என பெயர் மாற்றம் செய்திடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அரசிதழில் வெளியாவதற்கு மாநகராட்சி ஆணையர் உறுதுணையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து ஒருமனதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ₹62 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணி குறித்த 82 தீர்மானங்களுக்கு அனுமதி பெறப்பட்டது.இதில், மண்டலக்குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, நியமன குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர், கல்விக்குழு தலைவர் கற்பகம் சுரேஷ், எதிர்க்கட்சி தலைவர் சேலையூர் சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post குரோம்பேட்டை நியூகாலனி பகுதியை சங்கரய்யா நகர் என பெயர் மாற்றம் செய்யவேண்டும்: தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: