டிச.4ல் புயல் வலுவிழக்காமல் கரையை கடக்கும்.. டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: சென்னைக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே 4ம் தேதி மாலை புயல் கரையை கடக்கும் என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயலின் மையப்பகுதி எங்கே கரையை கடக்கும் என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. புயல் கரையை கடக்கும் போது திருவள்ளூர் மாவட்டத்தில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் 3ம் தேதி உருவாகும் புயல் மேலும் வலுவடைய சாதகமான சூழல் உள்ளது. கரையை நெருங்கி பயணித்தாலும் வலு குறையாமல் புயலாகவே கரையை கடக்கும். புயலாகவே கரையை கடக்க உள்ளதால் காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. மணிக்கு 80கி.மீ. வேகத்துக்கு மேல் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு.

சென்னை உள்பட 8 மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக பலத்த மழை பெய்யும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு. டிசம்பர் 4ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், நாளை காலை வரை வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தபடுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The post டிச.4ல் புயல் வலுவிழக்காமல் கரையை கடக்கும்.. டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: