கடலூர்: கடலூரில் பயணிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகளுக்கு நிகராக அரசு பேருந்துகளும் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு புறப்படுவதற்கு தனியார் பேருந்து ஒன்று தயார் நிலையில் இருந்துள்ளது.
அந்த பேருந்தில் கடலூரில் இருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறிஞ்சிப்பாடிக்கு செல்வதற்காக பயணிகள் வந்தபோது, தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இந்த பேருந்தில் ஏறக்கூடாது என்று கூறியுள்ளனர். ஏன் என்று பயணிகள் கேள்வி எழுப்பியபோது, விருதாச்சலத்திற்கு மட்டுமே ஏற வேண்டும் என்று வாக்குவாதம் செய்துள்ளனர். அதாவது கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் வழியில் உள்ள குறிஞ்சிப்பாடியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என விதிமுறைகள் உள்ளதால் தங்களை ஏற்றி செல்ல வேண்டும் என்று பயணிகள் கேட்டபோது, ஏற்ற முடியாது என்று கூறியதுடன் தகாத வார்த்தைகளால் அந்த பயணிகளை ஓட்டுநர் பேசியுள்ளார்.
இதனை பயணியர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது. தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அமைச்சரின் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் விசாரணை நடத்தியதில், தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தியது உறுதியானதால் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
The post கடலூரில் பயணிகளிடம் தகாத வார்த்தையில் பேசிய தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனரின் உரிமம் தற்காலிகமாக ரத்து..!! appeared first on Dinakaran.
