வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்வு: சென்னையில் ரூ.1,968 ஆக நிர்ணயம் : வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!!

சேலம்: காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக காஸ் சிலிண்டர் விலையை, தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. இந்நிலையில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு ரூ.200 குறைத்தது. இதனால், டெல்லியில் ரூ.903, மும்பையில் ரூ.902.50, கொல்கத்தாவில் ரூ.929, சென்னையில் ரூ.918.50 ஆக குறைந்தது.

தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் நிலையாக வைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை அவ்வப்போதும் மாற்றம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் இன்று அதிகாலை வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.இதன்படி, நாடு முழுவதும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்ந்தது. இதனால் சென்னையில் ரூ.1,942க்கு விற்கப்பட்ட கேஸ் விலை இம்மாதம் ரூ.1,968.50க்கு விற்பனை ஆகிறது. மேலும் இம்மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

The post வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்வு: சென்னையில் ரூ.1,968 ஆக நிர்ணயம் : வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!! appeared first on Dinakaran.

Related Stories: