மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி

கோவை, நவ. 30: கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளை சேர்ந்த மாற்றுத்தினாளி மாணவர்களுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டி நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி துவக்கிவைத்தார். இதனை தொடர்ந்து மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான போட்டிகள் 12 வயது, 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் என 4 பிரிவுகளில் நடந்தது. இப்போட்டியில் வட்டார அளவில் வெற்றி பெற்ற 107 பேர் பங்கேற்றனர்.

ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு பிரிவுகளில் 30 மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில், 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் சூலூர் ஒன்றியம் முத்துகவுண்டன்புதூர் பள்ளி மாணவன் புகழேந்தி, பெரியநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷ்மா ஜனாகவும், 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் சூலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சஞ்சய் ராம், சக்கர நாற்காலி போட்டியில் அரசூர் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவன் வருண் தேவ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

மேலும், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் தொண்டாமுத்தூர் ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த நிர்மல்குமார், 17 வயது பிரிவில் பொள்ளாச்சி எஸ்ஆர்எம்எஸ் பள்ளி மாணவன் சுதாகர், 19 வயது பிரிவில் கோவை மாநகராட்சி பள்ளி மாணவன் தருண் ஆகியோர் ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். இந்த மாநில அளவிலான போட்டி வரும் டிசம்பர் 2-ம் தேதி திருச்சியில் நடக்கிறது. மேலும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார். இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, ஒருங்கிணைந்த பள்ளிகளின் உதவி திட்ட அலுவலர்கள் இளமுருகன், குமார ராஜ, சிவகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கணேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: