39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பாஜ ஒருங்கிணைப்பாளர் பொறுப்பாளர் நியமனம்: கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு

சென்னை: பாஜவில் 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒருங்கிணைப்பாளர், பொறுப்பாளர் பதவிகளை மாநில தலைவர் அறிவித்துள்ளார். இந்த பட்டியலில், கே.டி.ராகவனுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டிருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுக, பாஜ இடையே மோதல் தீவிரமடைந்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது.

தமிழகத்திலும் அதிமுக கூட்டணியில் இல்லை என்று எடப்பாடி அறிவித்தார். இதனால் தமிழகத்தில் தனித்து விடப்பட்டுள்ள பாஜ நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. முதல்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியை தொடங்கியது. இது தொடர்பாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தி வந்தார். தொகுதி வாரியாக சிறப்பாக செயல்படும் பாஜ நிர்வாகிகள் குறித்த பட்டியல் சேகரித்து, அதிலிருந்து பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணாமலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் ஏற்கனவே முக்கிய பதவிகளில் இருந்து தற்போது அமைதி காத்து வரும் பலருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒருங்கிணைப்பாளராக லோகநாதன், பொறுப்பாளாராக நாகராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை வடக்கு தொகுதிக்கு, ஒருங்கிணைப்பாளராக பால் கனகராஜ், பொறுப்பாளராக பெப்சி சிவக்குமாரும், சென்னை தெற்கு தொகுதிக்கு ஒருங்கிணைப்பாளராக கரு நாகராஜன், பொறுப்பாளராக பாஸ்கரும், சென்னை மத்திய தொகுதிக்கு ஒருங்கிணைப்பாளராக சுமதி வெங்கடேஷ், பொறுப்பாளராக ஜி.ராதாகிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு ஒருங்கிணைப்பாளராக மீனாட்சி, பொறுப்பாளராக டால்பின் ஸ்ரீதர், காஞ்சிபுரம் தொகுதி ஒருங்கிணைப்பாளராக கே.டி.ராகவன், பொறுப்பாளராக தட்சணாமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, சேலம் தொகுதிக்கு கே.பி.ராமலிங்கம், சிதம்பரம் தொகுதிக்கு எஸ்ஜி சூர்யா, தென்காசி தொகுதிக்கு ராதாகிருஷ்ணன், ஈரோடு தொகுதிக்கு வானதி சீனிவாசன், நாமக்கல் தொகுதிக்கு வி.பி.துரைசாமி உள்ளிட்டோரும் தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த பட்டியலில் காஞ்சிபுரம் தொகுதி ஒருங்கிணைப்பாளராக இடம்பெற்றுள்ள கே.டி.ராகவன் தமிழ்நாடு பாஜவில் கிடுகிடுவென ஏறுமுகம் கண்டவர். இவர் பாஜ சார்பாக டிவி விவாதங்களில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார். தமிழ்நாடு மாநில தலைவர் பதவிக்கான ரேசிலும் இடம்பிடித்தார். ஆனால் 2021ம் ஆண்டு பாஜ மாநில பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கே.டி.ராகவன் விலகினார். கடந்த 2 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்தும் அவர் விலகி இருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு பாஜவில் கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பாஜ ஒருங்கிணைப்பாளர் பொறுப்பாளர் நியமனம்: கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: