நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

*அதிகாரிகள் நடவடிக்கை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி புதிய மற்றும் மத்திய பஸ் நிலையத்தில் பகல் நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இரு பஸ் நிலையங்களுக்கும் வெவ்வேறு பகுதியிலிருந்து பஸ்கள் வந்து சென்றாலும், பஸ் உள்ளிட்ட பிற வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய இடங்களில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகமானது.

மத்திய பஸ் நிலையம் முன்பு பாலக்காடு ரோடு, பின்புறம் வெங்கடேசா காலனி மற்றும் பெருமாள்செட்டி வீதி, ராஜாமில் ரோடு, கடைவீதி, பூ மார்க்கெட் பகுதி, தெப்பக்குளம் வீதி, நியூஸ்கீம் ரோடு, கோட்டூர் ரோடு, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாகவும், சில இடங்களில் வாகனங்கள் மட்டுமின்றி, பாதசாரிகளும் விரைந்து செல்ல முடியாத வகையிலும் பொது இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து புகார் எழுந்தது.

இதையடுத்து, வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று, பொள்ளாச்சி பஸ் நிலையங்களின் உள்புறம் மற்றும் வெளிபுறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், பாலக்காடுரோடு, வெங்கடேசா காலனி, கோட்டூர் ரோடு, சத்திரம் வீதி உள்ளிட்ட பல இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதற்கு முன்பு, அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், ஆக்கிரமிப்புகளை அகற்ற வருகின்றனர் என்பதையறிந்த கடைக்காரர்கள் பலர், தங்கள் கடைகள் முன்பு ஆக்கிரமித்து வைத்திருந்த பொருட்களை அவர்களாகவே முன்வந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அப்புறப்படுத்துவதற்காக, பொக்லைன் இயந்திரம் கொண்டு தயார் நிலையில் அதிகாரிகள் வைத்திருந்தனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி பஸ் நிலையம், வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி, வாகனங்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி ரோட்டை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்பணி 2 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இருப்பினும், வருங்காலங்களில், எச்சரிக்கையும் மீறி ஆக்கிரமிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

The post நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: