அதிமுக மாஜி அமைச்சர் காமராஜ் மீது ₹350 கோடி முறைகேடு புகாரை 6 மாதத்தில் விசாரிக்க வேண்டும்: லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான ₹ 350 கோடி முறைகேடு புகாரின்மீது 6 மாதங்களில் விசாரணையை முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். இவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் ₹350 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல, கடந்த 2015 முதல் 2021 வரை பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதலில் ₹2,028 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும், இதுசம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதியக் கோரி அறப்போர் இயக்கம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, 6 மாதங்களில் இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்படும். நீதிமன்றம் தீர்மானிக்கும் தேதியில் புகார்தாரர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றார்.
இதையடுத்து நீதிபதி, 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். புகார்தாரர்கள் இருவரும் டிச. 6ல் புலன் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post அதிமுக மாஜி அமைச்சர் காமராஜ் மீது ₹350 கோடி முறைகேடு புகாரை 6 மாதத்தில் விசாரிக்க வேண்டும்: லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: