வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்

 

கோவை, நவ. 29: கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதில், 14 லட்சத்து 96 ஆயிரத்து 770 ஆண் வாக்காளர்களும், 15 லட்சத்து 51 ஆயிரத்து 665 பெண் வாக்காளர்கள், 3ம் பாலினத்தவர் 569 பேர் என மொத்தம் 30 லட்சத்து 49 ஆயிரத்து 4 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 4,5 ஆகிய தேதிகளிலும், 25,26 ஆகிய தேதிகளிலும் மாவட்டத்தில் உள்ள 1,017 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

முகாமில், பெயர் சேர்க்க படிவம்-6, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, பிழை திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8 பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதில், 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் புதிதாக பெயர் சேர்க்க, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய மற்றும் பெயர் நீக்கம் செய்ய வேண்டி பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று விண்ணப்பித்தனர்.

இதில், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 37 ஆயிரத்து 3 பேரும், பெயர் நீக்கம் செய்ய 4,148 பேரும், திருத்தங்கள் மேற்கொள்ள 24 ஆயிரத்து 932 பேர் என 4 நாட்கள் நடைபெற்ற முகாமில் மொத்தம் 66 ஆயிரத்து 83 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதுதவிர ஆன்லைன் மூலமாகவும் பிழை திருத்தம், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சிறப்பு முகாம்கள் உள்பட கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 92 ஆயிரத்து 121 பேர் பெயர் சேர்க்க, பிழைகள் திருத்தம் உள்ளிட்டவை மேற்கொள்ள விண்ணப்பித்து உள்ளனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

The post வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் 66 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: