சீராபாளையம் பொதுமக்கள் வீட்டு பத்திரத்துடன் வந்து கலெக்டரிடம் மனு

 

கோவை, நவ. 28: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் மனு அளித்தனர். இதில், கோவை பேரூர் செட்டிபாளையம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘இந்திரா நகரில் 30 வருடங்களுக்கு முன்பு அரசு சார்பில் குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டது. இங்கு குடியிருந்து வரும் அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இதில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரை பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகிறது.

சுவர்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. கழிவறை வசதியும் இல்லை. இது தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்களின் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. மதுக்கரை சீராபாளையம் ஏஎம்பி காலனி பகுதியை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க வலியுறுத்தி வீட்டு பத்திரத்துடன் வந்து மனு அளித்தனர். மனுவில், ‘‘சீராபாளையத்தில் உள்ள ஏஎம்பி காலனியில் எங்களுக்கு சொந்தமான இடத்தை, ஒருவர் அத்துமீறி ஆக்கிரமித்து வைத்துள்ளார்.

இது குறித்து மதுக்கரை காவல் நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இருதரப்பும் இடத்திற்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர். ஆனால், தற்போது அந்த நபர் தரப்பினர் எங்கள் இடத்தில் கட்டிடம் கட்டி வருகின்றனர். எங்கள் இடத்தை மீட்டு தர வேண்டும்’’ என மனுவில் தெரிவித்திருந்தனர். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘‘கல்வி வளாகங்களில் அதிகரிக்கும் மத ரீதியான தாக்குதல்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து நடத்தப்படும் போதை பொருள் விற்பனை தடுக்க வேண்டும்.

அசோகபுரம் பள்ளியில் மாணவியை மத ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தி இருந்தனர். ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய கீதம் பாதியில் நிறுத்திவிட்டு கூடுதல் பொறுப்பு தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் உரையாற்றியது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் நேரடி விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியின் கலை ஆசிரியர் ராஜ்குமார் மனு அளித்தார்.

The post சீராபாளையம் பொதுமக்கள் வீட்டு பத்திரத்துடன் வந்து கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: