தொடர் கன மழையால் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் சிற்றருவிகள் ‘உதயம்’

 

மேட்டுப்பாளையம், நவ.28: மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 22-ம் தேதியன்று தமிழகத்திலேயே இதுவரை இல்லாத அளவில் 373 மிமீ மழை மேட்டுப்பாளையத்தில் பதிவானது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் – ஊட்டி, கோத்தகிரி சாலைகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.

இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் காவல், தீயணைப்பு, நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து சென்று பல மணி நேர போராட்டங்களுக்குப் பின்னர் ஜேசிபி, பொக்லைன் உதவியுடன் சாலையில் முறிந்து விழுந்த மரங்கள் மற்றும் மண்சரிவால் ஏற்பட்ட சேதங்களை சீரமைத்தனர்.

அதன்பின்னரே மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி செல்வதற்காக வாகனங்கள் இயக்கப்பட்டன. தற்போது இப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலைகளில் ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகியுள்ளன. இதனை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நின்று கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், சிற்றருவிகளின் முன்பு நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

The post தொடர் கன மழையால் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் சிற்றருவிகள் ‘உதயம்’ appeared first on Dinakaran.

Related Stories: